லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம் அஞ்சான். திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தில் சமந்தா கதாநாயகியாகவும் மனோஜ் பாஜ்பாய் வில்லனாகவும் நடித்திருந்தனர். மேலும் வித்யூத் ஜமால் முக்கிய கதாபாத்திரத்திலும் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருந்தார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சூர்யா பாடிய ‘ஏக் தோ தீன் சார்’ பாடல் சிறப்பம்சமாக அமைந்திருந்தது. 

Advertisment

மும்பை டான் கல்ச்சர், அசத்தலான சூர்யா கெட்டப், சூர்யா குரலில் பாடல் என ஏகப்பட்ட எதிர்பாப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை. சமூக வலைதலங்களில் கிண்டலுக்கும் கேலிக்கும் உண்டானது. குறிப்பாக  இயக்குநர் லிங்குசாமியின் பில்டப் பேச்சு சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியலாக மாறியது. இந்த நிலையில் இப்படம் வருகின்ற 28ஆம் தேதி ரீ ரிலீஸாகிறது. இதில் புதிதாக ரீ எடிட் செய்து வெளியாகிறது. இது தொடர்பாக இயக்குநர் லிங்குசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் சூர்யா மீது ஒரு பிரிவினர் எதிர்ப்பாக இருக்கிறார்களே எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஒரு நல்ல படம் வரும்போது அதை இவர்களால் நிறுத்த முடியாது. என்ன இருந்தாலும் மக்கள் அந்த படத்தை பார்ப்பார்கள். ஆனால் இந்த படத்தில் நானும் சில தவறுகள் செய்திருக்கிறேன். அதை 100 சதவீதம் ஒற்றுக் கொள்கிறேன். 

Advertisment

நான் ஒரு மிகச் சரியான படத்தை கொடுத்து விட்டேன்... இருந்தாலும் திட்டுகிறார்கள் என்று அவர்கள் மீது பழி போட விரும்பவில்லை. ஆனால் அவர்கள் தவறுகளை கண்டுபிடித்து தனிப்பட்ட முறையில் எடுத்து சென்று விட்டார்கள். ஒரு ஆள் தொடர்ந்து வெற்றி பெறும்போது அவர்களாலும் என்ன செய்ய முடியும். நானும் தவறு செய்து இருக்கிறேன். அதை அவர்கள் பல மடங்கு ஆக்கிவிட்டார்கள். என்னை திட்டும் போது எனக்கு ஆதரவாக வந்த வெங்கட் பிரபுவுக்கும் அப்போது திட்டு விழுந்தது. இப்போது எனக்குப் பிடித்த இயக்குநர்களை ட்ரால் செய்யும்போது நானும் உள்ளே சென்று ஆதரவு தர முடியாது. ஏனென்றால் முகம் தெரியாதவர்களுடன் எப்படி சண்டை போட முடியும். மணிரத்தினம், ஷங்கர் போன்றவர்களின் படங்கள் பெரிய வெற்றி பெற்றிருந்தாலும் அதை ஒன்னும் இல்லாமல் ஆக்க வேண்டும் என பெரிய வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். இந்த நெகட்டிவிட்டியை தவிர்க்க வேண்டும்” என்றார்.