‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். அதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வந்தார். அவரே தயாரிக்கும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, 'பாகுபலி' பிரபாகர், சந்தோஷ் பிரதாப், 'லியோ' புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இப்படம் தூத்துக்குடியை மையமாக வைத்து ஒரு உண்மை சம்பவ அடிப்படையில் ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் குறித்து முன்னதாக பேசிய லெஜண்ட் சரவணன், இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், த்ரில் என அனைத்து சுவாரஸ்ய அம்சங்களும் இருக்கும் எனவும் டைட்டிலும் மாஸாக இருக்கும் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் படத்தின் டைட்டில் லுக் மற்றும் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘லீடர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் லெஜண்ட் சரவணன் பேசுகையில், “இந்தப் படத்தின் தலைப்பை பார்த்தவுடன் இது அரசியல் சார்ந்த படமா என்ற கேள்வி வரும். ஆனால் இந்த படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகளோ அரசியல் சார்ந்த வசனமோ துளிக்கூட இல்லை. இது முழுக்க முழுக்க கமர்சியல் என்டர்டைன்மென்ட் படம்.
ஒரு அப்பாவியான அப்பாவும் மகளும் சந்தோஷமாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும்போது திடீரென ஒரு பெரிய கேங்ஸ்டர் உள்ளே நுழைகிறார், அதற்குப் பிறகு நடக்கும் விஷயம் தான் படத்தின் கதை. இன்றைய ரசிகர்களுக்கு பிடிக்கும் அளவிற்கு திரைக்கதையை இயக்குநர் துரை செந்தில்குமார் அமைத்துள்ளார். என்னுடைய சிறுவயதிலிருந்தே சினிமா மீதான ஆர்வம் அதிகமாக இருந்தது. என்னுடைய பிரிட்ஜில் ஒரு பக்கம் ஷாருக்கானின் புகைப்படமும் இன்னொரு பக்கம் சல்மான்கானின் புகைப்படமும் தான் ஒட்டி வைத்திருப்பேன். அப்போது என் தாயாரிடம் நானும் இது போல் ஒரு நாள் நடிகராவேன் என்றேன். அவரும் சிரித்துக் கொண்டே சந்தோஷப்படுவார்.
ஆனால் என்னுடைய சூழல் வியாபாரத்துக்குள் சென்று விட்டேன். என் தந்தையார் மீது மிகப்பெரிய பக்தியும் மரியாதையும் வைத்திருப்பதால் அவருடன் அவருடன் வியாபாரத்தில் இறங்கிவிட்டேன். அதில் எனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளேன். அதாவது கடைக்கு முதல் ஆளாக உள்ளே செல்வேன், கடைசி ஆளாக வெளியே வருவேன். இதையேத்தான் படப்பிடிப்பிலும் பின் தொடர்கிறேன். எதில் கவனம் செலுத்தினாலும் அதில் எனது முழுக் கவனத்தை செலுத்தி முழு உழைப்பையும் கொடுப்பேன். இதுதான் என்னுடைய கேரக்டர். இந்த படம் நல்ல கதையம்சம் கொண்ட ஒரு மாஸ் கமர்சியல் படம். உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.
சினிமா துறையில் ஒரு படம் வெற்றி என்பது தனி நபரின் வெற்றி அல்ல. படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அதே போல் திரையரங்கிலும் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் சினிமா துறை தற்போது இறங்கு முகமாக இருக்கிறது. இதனால் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு குறைகிறது. அதனால் ஒவ்வொரு படமும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பேன். சினிமாத்துறை வளர பத்திரிக்கை உட்பட அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. அதற்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார். மேலும் படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தன்று வெளியாகும் என்றும் பின்பு கிளிம்ஸ் மார்ச் 6ஆம் தேதி வெளியாகும் என்றும் படம் ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கு முன்பு இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்கும் என தெரிவித்தார்.
Follow Us