தமிழ்த்திரையில் முன்னணி நடிகைகளில் குறிப்பிடத்தக்க ஒருவராக இருந்தவர் குஷ்பு. இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், சத்யராஜ், கார்த்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர். தமிழ்ப் படங்களைத் தவிர்த்து கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். திரை வாழ்க்கைக்குப் பிறகு இவர் அரசியலில் கால் பதித்தார். திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளில் பயணித்த இவர், தற்போது பாஜக-வில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். தமிழ்நாட்டில் நன்கு அறியப்பட்ட பாஜக முகங்களில் இவரும் ஒருவர் ஆவார்.
இவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த சந்திப்பில் "ஜனநாயகன்" குறித்து ஒரு செய்தியாளர் கேள்வியெழுப்பியதற்கு பதிலளித்த குஷ்பு, "விஜய் எனக்கு தம்பி போன்றவர். அவரைத் தம்பி என்று தான் நான் சொல்வேன். அவரும் என்னை அக்கா என்று தான் அழைப்பார். ஜனநாயகன் அவரது கடைசிப் படம் என்று சொன்னதில் எனக்கு மிகுந்த வருத்தம். அவருடைய நடனம், ஆக்ஷன் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். உண்மையில் விஜய்யின் பெரிய ரசிகை நான். அவர் இனிமேல் திரையில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும், ஒரு புதிய பயணத்தை அவர் தொடங்கி இருக்கிறார். அதற்கு அவருக்கு வாழ்த்துக்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விஜய் கட்சி தொடங்கிய நாள் முதலே பாஜக தான் தங்களின் கொள்கை எதிரி என்று கூறிவருகிறார். பல அரசியல் மேடைகளில் பாஜக-வை விஜய் விமர்சித்தும் பேசியுள்ளார். இந்த நிலையில் பாஜக-வில் உள்ள, முக்கிய நிர்வாகி விஜயின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
Follow Us