விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்து இதற்கு முன்பு வெளியான மேக்ஸ் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. தற்பொழுது அதன் தொடர்ச்சியாக மார்க் என பெயரிடப்பட்டிருக்கும் மற்றொரு படம் மூலம் இதே கூட்டணி கோதாவில் குதித்து இருக்கிறது. மேக்ஸ்-க்கு கிடைத்த அதே வரவேற்பு இந்த மார்க் படத்திற்கும் கிடைத்ததா, இல்லையா?
வில்லன் விக்ராந்த் பல குழந்தைகளை கடத்தி ஒரு பதுங்கு குழியில் அடைத்து விடுகிறார். அதில் உள்ள ஒரு குழந்தையிடம் இருக்கும் செல்போனில் அடுத்து முதல்வராக துடிக்கும் மற்றொரு வில்லன் தன் அம்மாவை கொலை செய்த வீடியோ இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த வில்லன் குரூப்பும் அந்த குழந்தையை தேடி அலைகிறது. இதற்கிடையே பணியிடை நீக்கத்தில் இருக்கும் ஐபிஎஸ் போலிஸ் ஆபீஸரான கிச்சா சுதிப்பும் அந்த குழந்தையை தேடி அலைகிறார். ஒரு பக்கம் வில்லன் குரூப் மற்றொரு பக்கம் கிச்சா சுதீப் என தேடுதல் வேட்டை பரபரவென தொடர இறுதியில் அந்த குழந்தையை யார் கண்டுபிடித்தார்கள்? அந்த செல்போன் மீட்கப்பட்டதா இல்லையா? குழந்தை கடத்தலுக்கு காரணம் என்ன? அந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டதா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
இந்த படம் விஜய் கார்த்திகேயா - கிச்சா சுதீப் கூட்டணியின் முந்தைய படம் போல் ஒரு நாளில் நடக்கும் கதையாக விரிகிறது. படம் ஆரம்பித்து எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் வேகமாக பரபரவென திரைக்கதை பயணித்து எங்கெங்கு மாஸ் எலிமெண்ட்ஸ் தேவையோ அங்கே எல்லாம் கமர்சியல் கலந்த மாஸ் எலிமெண்ட்ஸை வைத்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் பார்க்கின்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்ல என்டர்டைன்மென்ட் படமாக இப்படம் அமைந்திருக்கிறது. கன்னடத்தில் இந்த படத்தை உருவாக்கி இருந்தாலும் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பிடித்தவாறு இந்த கால இளைஞர்களைக் கவரும் வகையில் இந்த ட்ரெண்டுக்கு ஏற்ப அதே சமயம் குடும்ப ரசிகர்களுக்கும் பிடித்தார் போல் திரைக்கதை அமைத்து படத்தை ரசிக்க வைத்திருக்கின்றனர்.
லாஜிக் பார்க்காமல் வெறும் மேஜிக் மட்டும் நம்பி படத்திற்கு செல்வோருக்கு திருப்தி நிச்சயம். படத்தில் பல்வேறு வேகத்தடைகள் ஆங்காங்கே இருந்தாலும் கமர்சியல் கலந்த திரைக்கதை அதையெல்லாம் மறக்கடிக்க செய்து ஒரு நல்ல மாசான கமர்சியல் படம் பார்த்த உணர்வை தருகிறது. குறிப்பாக ஆக்சன் காட்சிகள் மற்றும் துப்பறியும் காட்சிகள் சிறப்பாக இருப்பது படத்திற்கு பிளஸ். கிச்சா சுதீப் முந்தைய படத்தை போல் இந்த படத்திலும் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து மாஸ் காட்டியிருக்கிறார். ஒரு முன்னணி ஹீரோவுக்கே உரித்தான ஸ்டைல் விஷயங்கள் மற்றும் மாஸ் விஷயங்கள் என அதகளப்படுத்தி இருக்கிறார். இந்த கதைக்கு என்ன தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார்.
வில்லன் நவீன் சந்திரா காட்டு கத்தும் வில்லனாக வந்து மிரட்டி இருக்கிறார். மற்றொரு வில்லனான விக்ராந்த் அமைதியான வில்லத்தனத்தை காட்டி மிரட்டி இருக்கிறார். இன்னொரு வில்லனாக வரும் குரு சோமசுந்தரம் கலகலப்பான வில்லனாக கவர்கிறார். மற்றொரு வில்லனாக வரும் மலையாள நடிகரும் அவர் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நாயகியாக வரும் ரோஷினி பிரகாஷ் கொடுத்த வேலையை நிறைவாக செய்து இருக்கிறார். காமெடிக்கு யோகி பாபு தனக்கு கொடுத்த வேலையை இந்த முறை நிறைவாக செய்து சிரிப்பு மூட்டி இருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து விட்டு சென்றிருக்கின்றனர்.
சேகர் சந்திரா ஒளிப்பதிவில் இரவு நேர காட்சிகள் மற்றும் ஆக்சன் காட்சிகள் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டு சிறப்பாக அமைந்திருக்கிறது. இவரது சிறப்பான ஒளிப்பதிவின் மூலம் இந்த படம் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. காந்தாரா புகழ் அஜ்னீஷ் லோக்நாத் ஒரு மாஸ் படத்திற்கு எந்த இசை தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்திருக்கிறார். பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்து படத்தை நல்ல தரமான படமாக மாற்றி இருக்கிறது.
எந்த லாஜிக்கையும் பார்க்காமல் வெறும் மேஜிக்கை மட்டும் நம்பி இரண்டரை மணி நேர கமர்சியல் கலந்த ஆக்சன் திரைப்படத்தை பார்க்கும் எண்ணத்தோடு இந்த திரைப்படத்திற்கு செல்லும் பட்சத்தில் இது ஒரு நிறைவான நல்ல என்டர்டைன்மென்ட் படமாக இருக்கும். கைதி படம் போல் ஒரே நாளில் நடக்கும் கதையாக இருப்பது படத்திற்கு பிளஸ் ஆகவே அமைந்திருக்கிறது. சின்ன சின்ன நெருடல்கள் மற்றும் வேகத்தடைகள் ஆங்காங்கே தென்பட்டாலும் அதை தாண்டிய விறுவிறுப்பான திரைக்கதை அம்சம் மற்ற விஷயங்களை மறக்கடிக்கச் செய்து படத்துடன் நம்மை ஒன்ற வைத்து இந்த மார்க்கை ரசிக்க வைத்திருக்கிறது.
மார்க் - பாஸ் மார்க்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/03/15-46-2026-01-03-13-35-59.jpg)