விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா, ரோஷ்னி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’. இப்படத்தில் நடித்ததோடு சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கிச்சா சுதீப் தயாரித்தும் உள்ளார். இப்படத்திற்கு அஜனீஷ் பி லோக்னாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது. இதையொட்டி சென்னையில் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். 

Advertisment

அப்போது நடிகை ரோஷ்னியிடம், ஒரு செய்தியாளர், ‘வணங்கான் படத்தில் பயங்கரமாக வசனம் பேசியிருப்பீர்கள், அதே போல் இந்த படத்தில் எந்தளவு வசனம் கொடுத்திருக்கிறார்கள்? மேடையிலேயே உங்களை ஓரமாக உங்கார வைத்திருக்கிறார்கள், படத்திலும் அப்படித்தானா?’ என்று கேள்வி எழுப்பினார். உடனே குறுக்கிட்ட கிச்சா சுதீப், “இந்த மாதிரி ஒரு கேள்வி கூட படப்பிடிப்பில் வரவில்லை. அதனால் தான் இப்படம் நன்றாக வந்திருக்கிறது” என்றார். 

Advertisment

பின்பு ரோஷ்னியை கைபிடித்து கூப்பிட்டு மேடையில் நடு பக்கம் உட்கார வைத்தார். அவரோடு ஓரத்தில் அமர்ந்திருந்த இன்னொரு நாயகியையும் நடுவே அமர வைத்தார். பின்பு பேசிய அவர், “நாங்கள் ரோஷ்னியை எந்த நோக்கத்துடனும் ஓரத்தில் உட்காரவைக்கவில்லை. அது தானாக அமைந்தது. நீங்கள் கேட்ட கேள்வி அசௌகரியத்தை உருவாக்குகிறது. யார் மனதிலும் அப்படிப்பட்ட எண்ணம் இல்லை. கொண்டாட்டத்திற்கு வந்தால் கொண்டாடத்தான் வேண்டும். படம் எப்படி உருவானது என்று கேட்டால் அதற்கு நான் பதில் சொல்வேன். ஒரு நபர் கூட படப்பிடிப்பு தளத்தில் இன்னொரு நபரிடம் சென்று என்ன நடந்தது தெரியுமா? எனக் கேட்டதில்லை. இப்படி நடந்தது என்றும் போட்டுக்கொடுக்கவில்லை. இது நடக்கக்கூடாது. அன்பில் அன்பு மட்டும் தான் இருக்க வேண்டும். கடின உழைப்பில் கடின உழைப்பு தான் இருக்க வேண்டும்” என்றார். 

தொடர்ந்து ரோஷ்னியிடம், “நாங்கள் உங்களை எப்படி நடத்தினோம்? எப்படி மரியாதை கொடுத்தோம்? எப்படி நேசித்தோம்? அது பற்றி சொல்லுங்கள்” எனக் கேட்டுவிட்டு அமர்ந்தார். கிச்சா சுதீப்பின் இந்த செயல் அரங்கில் கைதட்டை பெற்றது. மேலும் சமூக வலைதளத்திலும் பலரது பாராட்டை பெற்று வருகிறது. 

Advertisment