கேரளாவில் ஆண்டுதோறும் மாநில திரைப்பட விருதுகள் 1969ஆம் அண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு 2024ஆம் ஆண்டு படங்களுக்கான 56வது திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கலாச்சாரத்துறை அமைச்சர் சஜி செரியன் திருச்சூரில் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டுள்ளார். அதில் அவரோடு விருதின் நடுவர் குழு தலைவர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட விருது நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தாண்டு சிறந்த நடிகருக்கான விருது பிரம்மயுகம் படத்திற்காக மம்மூட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதே படத்திற்காக மம்முட்டிக்கு தேசிய விருது கிடைக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. இப்போது கேரள மாநில விருது கிடைத்துள்ளது. இது தொடர்பாக பேசிய பிரகாஷ் ராஜ், “தேசிய விருதுகளில் சமரசம் செய்யப்படுகிறது. இதை சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. கேரளாவில் ஒரு ஜூரி தலைவராக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் அவர்கள் என்னை அழைத்தபோது அனுபவம் வாய்ந்த கேரளா அல்லாத ஒரு நபர் தேவை என்றும் விருது முடிவுகளில் எந்த இடையூறும் நாங்கள் செய்ய மாட்டோம் என்றும் சொன்னார்கள். இது தேசிய விருதுகளில் நடக்காது. அங்கு பைல்ஸ்களுக்கும்(Files) பைல்ஸ்களுக்கும்(Piles) விருது வழங்கப்படுவதை நாம் பார்க்கிறோம். இப்படிப்பட்ட ஜூரியும் அரசாங்கமும் இருந்தால் மம்மூட்டிக்கு விருது கிடைக்காது” என்றார்.
இது ஒரு புறம் இருக்க இந்தாண்டு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதும் சிறந்த குழந்தைப் படத்திற்கான விருதும் அறிவிக்கவில்லை. இது குறித்து பேசிய பிரகாஷ் ராஜ், “இந்த ஆண்டு நடுவர் குழு சிறந்த குழந்தைகள் படம் மற்றும் குழந்தை நட்சத்திரங்களுக்கான விருது யாருக்கு என தேர்ந்தெடுக்கவில்லை. ஏனெனில் குழந்தைகளுக்கான படம் ஏதும் வரவில்லை. வந்தவை குழந்தைகள் பார்வையில் இல்லை” எனக் கூறியுள்ளார். இது தற்போது கேரளத் திரைத்துறையில் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. சிலர் பிரகாஷ்ராஜ் எதிராக கருத்து தெரிவித்துள்ளார்கள். மல்லிகாபுரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரமான தேவானந்தா ஜெபின், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடுவர்கள் குழந்தை நட்சத்திரங்களை கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து குழந்தைகளை வைத்து ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ படத்தை இயக்கிய வினேஷ் விஸ்வநாத், சிறந்த குழந்தை நடிகருக்கான தகுதியற்ற அங்கீகாரம் உலகில் இல்லாத போது குழந்தைகள் உயர்ந்து நிற்கிறார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
Follow Us