கேரளாவில் மார்க்கிசிஸ்ட் கட்சியியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான பிரதிபா, திறப்பு விழாக்களில் திரை பிரபலங்கள் அரைகுறை ஆடைகளுடன் வருவதாக விமர்சித்துள்ளார். காயம்குளம் பகுதியில் எருவா நாளந்தா கலை மற்றும் கலாச்சார மன்ற நூலகத்தின் 34வது ஆண்டு விழாவின் நிறைவு நாளில் பேசிய அவர், “ஒரு நடிகர் சரியான உடை அணியாமல் வரும்போது, ​​அந்த நிகழ்ச்சிக்கு மக்கள் அதிக அளவில் வருகிறார்கள்.
நமது சமூகம் சினிமா நடிகர்கள் மீது ஒருவித பைத்தியக்காரத்தனத்தை வளர்த்துக் கொண்டதாகத் தெரிகிறது. இது ஏன் நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. இது மாற வேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் கண்ணியமாக உடையணிந்து வர வேண்டும் என்பதை நான் வலியுறுத்த வேண்டும். கேரள மக்கள் அவ்வளவு ஆபாச எண்ணம் கொண்டவர்களா என்ன? இதைச் சொல்வதற்காக நான் ஒழுக்கமானவள் என்று குற்றம் சாட்டாதீர்கள். இது கண்ணியமாக உடை அணிவது பற்றிய விஷயம். மக்கள் ஆடை அணியவோ அல்லது அணியாமல் இருக்கவோ சுதந்திரம் உள்ள ஒரு நாட்டில் நாம் வாழ்கிறோம்” என்றார்.
இதையடுத்து பிரபல நடிகர் ஒருவர் தொகுத்து வழங்கும் ஒரு ரியாலிட்டி ஷோவையும் அவர் மறைமுகமாக விமர்சித்தார். இது குறித்து பேசிய அவர், “கேரளாவில் இப்போது மாலையில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில், மற்றவர்கள் தூங்கும்போது ரகசியமாகப் பார்த்து, அவர்களின் ஆடைகள் எவ்வளவு இறுக்கமாக இருக்கின்றன என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஒரு பிரபல நடிகர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஜனநாயகத்திற்குத் தேவை நட்சத்திர மன்னர்கள் அல்ல, மாறாக மக்களிடையே பணிபுரியும் உண்மையான மனிதர்கள், அதைச் சொல்ல நமக்கு தைரியம் இருக்க வேண்டும்” என்றார். அவர் சொன்ன நடிகர் மோகன்லால் என்றும் அவ்ர் சொன்ன நிகழ்ச்சி பிக் பாஸ் என்றும் சமூக வலைதளத்தில் யூகித்து வருகின்றனர்.