அசுரன் படம் மூலம் பிரபலமான கருணாஸின் மகனான கென் கருணாஸ் அடுத்தாக ‘விடுதலை பாகம் 2’ படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களுக்கு முன்னதாக சில படங்களின் தோன்றியிருக்கிறார். நடிகராக மட்டும் இல்லாமல் கருணாஸ் தயாரித்த ‘சல்லியர்கள்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதில் ஈஸ்வர் என்றவருடன் இணைந்து இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில் இயக்குநராக கென் கருணாஸ் அறிமுகமாகிறார். பர்வாதா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் படத்திற்கு தலைப்பு வைக்கப்படவில்லை. ஆனால் தற்காலிகமாக புரொடக்ஷன் நம்பர் 1 என அழைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. பள்ளி பருவ வாழ்க்கையை மைய்யமாக வைத்து இப்படம் உருவாகிறது.
இப்படத்தை இயக்குவதோடு நடிக்கவும் செய்கிறார் கென் கருணாஸ். இப்படத்தின் அறிவிப்பு ஒரு முன்னோட்டமாக வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த முன்னோட்டம் வரும் 18ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.