இயக்குநர் சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இப்படத்தை ஃபேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தில் ராதிகா சரத்குமார், சுனில், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் பல மாதங்களாக அப்டேட் இல்லாமல் இருந்தது. மேலும் ரிலீஸ் தேதியும் வெளியிடப்பட்டு பின்பு வெளியாகாமல் இருந்துள்ளது. இப்போது ஒரு வழியாக வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் இப்படம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவது தொடர்பான கேள்விக்கு, “சில இணையதளங்களில் பயங்கரமான, எதிர்பாராத விஷயங்களை பார்க்க முடிகிறது. குழந்தைகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நான் சமீபத்தில் யூனிசெஃப்பில் இணைந்தேன், அதன் மூலமாக என்ன நல்லது செய்ய முடியுமோ, அதை செய்வேன். பெண்களுக்கு பாதிப்பு என்றால் சினிமா மூலம் என்ன மெசேஜ் கொடுக்க முடியுமோ அதை கொடுப்பேன். இதற்கு எல்லாருடைய ஒத்துழைப்பும் தேவை. அனைவரும் சேர்ந்து நின்றால் பல விஷயங்களை மாற்ற முடியும் ஆனால் அதற்கு நிறைய காலம் தேவைப்படும்” என்றார்.
இதையடுத்து நடிகைகளுக்கு எதிராக வெறுப்பை பரப்பும் விஷயங்களை எப்படி கடந்து போகிறீர்கள் என்ற கேள்விக்கு, “நான் ட்விட்டர் பக்கமே இப்போது அதிகம் போவதில்லை. அதைப் பார்த்து எதுக்கு நம்மளுடைய மைண்ட் செட்டை ஸ்பாய்ல் பண்ணிக்கிட்டு. நெகட்டிவிட்டியை அவாய்ட் பண்றதை தான் பின்பற்றுகிறேன். இப்போது பெரிய பிரச்சினையாக ஏஐ இருக்கிறது. தொழில்நுட்பம் என்பது மனிதர்கள் கண்டுபிடித்தது. ஆனால் மனிதர்களை விட ஏஐ இப்போது கை மீறிப் போவதாக தெரிகிறது. சமீபத்தில் நான் ஒரு பட விழாவில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்றை பார்த்தேன். அது தவறான ஆங்கிளில் இருந்தது. அதை பார்த்ததும் நாம இப்படி போஸ் கொடுக்கலையே என யோசித்தேன். ஆனால் கடைசியில் அது நானே கிடையாது. இப்படி எடிட் செய்வதால் அவங்களுக்கு என்ன லாபம்.
ஒவ்வொரு முறையும் சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு விஷயத்துக்கு பயந்து கொண்டிருப்போம். இப்போது அது ஏஐ-யாக இருக்கிறது. தொழில்நுட்பம் வளர வளர சில பாதிப்புகளும் உருவாகிறது. சமீபத்தில் நானும் சமந்தாவும் ஒன்றாக நிற்கும் புகைப்படத்தை பார்த்தேன். அது உண்மையாகவே நாங்கள் நிற்பது போல்இருந்தது. எது உண்மை எது போலி எனத் தெரியவில்லை. எனக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் உண்டு. அது எனக்கே என்னை பற்றி பிடிக்காத விஷயம். இப்போது முடிந்த அளவு அதை குறைத்து வருகிறேன். சில ரீல்ஸ் என்னுடைய கணவருக்கு அனுப்புவேன். அவர் பார்த்துவிட்டு இது பார்த்தாலே தெரியலையா ஏஐ-ன்னு சொல்லுவார். பிறகு கமெண்டில் போய் பார்த்தால் அது ஏஐ என தெரிய வரும். அதனால் எதை நம்புவது எதை நம்ப வேண்டாம் என ஒன்றுமே தெரியவில்லை. இதை ஒரு காரணமாக வைத்து அந்தப் பக்கமே போகக்கூடாது என விரக்தியாக இருக்கிறது” என்றார்.
பின்பு சமூக வலைத்தளத்தில் ஃபேக் ஐடியால் விமர்சனங்களை செய்யும் நபர்களுக்கு என்ன அறிவுரை கூறுகிறீர்கள் என்ற கேள்விக்கு, “வாழு வாழ விடு” என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “நான் எல்லா விமர்சனத்திற்கும் பதில் சொல்லும் ஆள் கிடையாது அது உச்சத்துக்கு சென்று மன உளைச்சல் ஏற்படுத்தும் போது அதற்கு பதில் அளிப்பேன். அர்த்தமே இல்லாமல் விமர்சன்னம் செய்பவர்களை பார்க்கும் போது, இவங்களுக்கு வேற வேலையே இல்லையா என கேட்க தோன்றும். ஆனால் அதையே வேலையாக வைத்திருந்தால், நாம் என்ன செய்ய முடியும்” என்றார்.
Follow Us