‘லப்பர் பந்து’ படத்திற்கு பிறகு அட்டகத்தி தினேஷாக இருந்த தினேஷ் தற்பொழுது கெத்து தினேஷாக மாறியிருக்கிறார். அவருக்கு அந்தப் படம் கொடுத்த மார்க்கெட் மிகவும் பெரியது. கிடைத்த மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள இருக்கும் இந்த நேரத்தில் அவர் ஏற்கனவே நடித்து கிடப்பில் கிடந்த ‘கருப்பு பல்சர்’ திரைப்படம் மூலம் கோதாவில் குதித்திருக்கிறார். அவரது முந்தைய படங்கள் மூலம் எடுத்த பெயரை இந்த கருப்பு பல்சர் காப்பாற்றியதா, இல்லையா? 

Advertisment

மினரல் வாட்டர் தொழில் செய்து வரும் தினேஷ் தனது காதலிக்காக சக தொழில் போட்டியாளரான மன்சூர் அலிகானிடமிருந்து ஒரு கருப்பு நிற பல்சர் பைக்கை செகண்ட் ஹாண்டில் வாங்குகிறார். அந்த கருப்பு நிற பல்சர் தினேஷிடம் வந்த பிறகு அது தானாகவே அமானுஷ்யமாக செயல்படுகிறது. இதனால் அவருக்கு பல சிரமங்கள் ஏற்பட்டு விபத்தும் ஏற்படுகிறது. என்ன ஏது என்று தெரியாமல் விழி பிதுங்கி இருக்கும் தினேஷுக்கு அந்த பைக்கில் ஒரு ஆவி புகுந்து இருப்பது தெரிய வருகிறது. இதற்கிடையே மதுரையில் இருக்கும் வில்லன் அஜய் பிரின்ஸ் சென்னையில் இருக்கும் தினேஷை கொல்ல வருகிறார். அவர் ஏன் சம்பந்தமே இல்லாமல் தினேஷை கொல்ல வர வேண்டும்? அவருக்கும் தினேஷுக்கும் என்ன பகை? அந்தக் கருப்பு பல்சரில் இருக்கும் ஆவி யார்? அந்த ஆவி ஏன் தினேஷை பிடித்தது? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

Advertisment

இதுவரை எத்தனையோ பேய் படங்கள் பார்த்திருக்கும் நாம் இந்த முறை ஒரு மோட்டார் சைக்கிளில் பேய் பிடித்திருக்கும் வித்தியாசமான கதையை இந்த படத்தின் மூலம் பார்க்கலாம். ஒரு மோட்டார் சைக்கிளுக்கு பேய் பிடித்து அதை எப்படி எல்லாம் மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது. அதுவும் அது எந்த மாதிரியான பேய் என வித்தியாசமாக கதையை யோசித்து இருக்கும் இயக்குநர் திரைக்கதையில் அதே புதுமையை புகுத்தியிருக்கலாம். கதைக்களம் புதிதாக இருந்தாலும் திரைக்கதையில் ஏனோ பலவீனமாக இருப்பது படத்திற்கு மைனஸ். படம் ஆரம்பித்து இறுதிவரை கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் படி காட்சிகளை உருவாக்க முயற்சி செய்த இயக்குநர் அதில் கொஞ்சம் புதுமையும் சேர்த்து இருக்கலாம். சில இடங்களில் கலகலப்பான காட்சிகள் ஆறுதல் அளிக்கின்றன. அதே போல் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகளும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். 

லப்பர் பந்துக்கு பிறகு மார்க்கெட் ஏறுமுகத்தில் இருக்கும் தினேஷ் இந்த படம் மூலம் சற்று சரிவை சந்திந்திருக்கிறார். இருந்தும் இது பல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படம் என்பதால் அது பெரிதாக அவரை பாதிக்கவில்லை. தனக்கு கொடுத்த வேலையை வழக்கம்போல் சிறப்பாகவே செய்து இருக்கிறார். படத்தில் இரு வேடங்களில் வருகிறார் இரு கதாபாத்திரங்களையும் சிறப்பாகவே செய்திருக்கிறார். நாயகி ரேஷ்மா வெங்கடேஷ் வழக்கமான நாயகியாக வந்து வழக்கமான வேலையை செய்து விட்டு சென்று இருக்கிறார். பிராக்ஸ்டர் ராகுல் சில காட்சிகளே வந்தாலும் சிரிப்பு மூட்டி இருக்கிறார். மன்சூர் அலிகான் படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார். அதில் வில்லத்தனம் காட்டி மிரட்ட முயற்சி செய்திருக்கிறார். வில்லனாக வரும் அஜய் பிரின்ஸ் வழக்கமான வில்லத்தனம் காட்டியிருக்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் சரவண சுப்பையா, மதனிகா உட்பட பலர் அவரவர் வேலையை செவ்வன செய்துவிட்டு சென்று இருக்கின்றனர். 

Advertisment

பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவில் மதுரை சம்பந்தப்பட்ட காட்சிகள் மற்றும் ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பு. இன்பா இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை ஓகே. பெரிய ஹீரோக்களை போல் காதல் ஆக்‌ஷன் காமெடி பேய் ஹாரர் என கமர்சியலாக நடித்து பெயர் வாங்க முயற்சி செய்த தினேஷுக்கு இந்த படம் சற்றே சறுக்களாகவே அமைந்திருக்கிறது. புதுமையான கதையை தேர்ந்தெடுத்த படக்குழு திரைக்கதையிலும் அதே புதுமைகளை கொடுத்திருந்தால் இந்த படம் சிறப்பாக அமைந்திருக்கும்.

கருப்பு பல்சர் - ஸ்பீடு குறைவு!