கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. இதில் நாயகியாக தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். எம்.ஜி.ஆரை மைய்யப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கார்த்தி கலந்து கொண்டு பேசுகையில், “போன வருடம் பயங்கர கொண்டாட்டத்துடன் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி செய்தோம். ஆனால் தடங்கல் வந்துவிட்டது. அது என் முதல் படத்திலேயே நடந்திருக்கிறது. தொடர்ந்து அடுத்த படத்தில் கூடுதலாக நடந்தது. அதனால் தடங்கள் எனக்கு புதிது இல்லை, பழகியது தான். ஞானவேல் ராஜாவுக்கு இருக்கும் சூழ்நிலையில் அவருக்கு நான் ஆறுதல் கூறும் போது அவர் எனக்கு ஆறுதல் கூறினார். நமக்கு இருக்கும் போராட்டத்தில் உடலை கவனிக்க மறந்து விடுகிறோம், அதனால் உடலை கவனிக்க மறந்து விடாதீர்கள் என்று மட்டும் தான் அவரிடம் நான் சொன்னேன்.
சினிமாவில் நிறைய விஷயங்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நல்ல கதை அதற்கான டைரக்டர், நடிகர் தயாரிப்பாளர் என அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களை அதுவே முடிவு செய்து கொள்ளும். அதை நம்பினால் போதும், நாம் நிம்மதியாக இருக்கலாம். அப்படி இல்லையென்றால் தடங்கள் வரும்போது ரொம்ப பதட்டமாக மாறிவிடுவோம். இந்த படம் ஒரு பெரிய தாமதத்துக்கும் போராட்டத்துக்கும் பின்பு வெளியாகிறது. நிறைய பேருக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன், முக்கியமாக அண்ணாவுக்கு. இந்தப் படம் ரிலீஸாக அவர் பெரிய உதவி செய்திருக்கிறார்.
நலன் குமாரசாமி எல்லாருக்கும் பிடித்தமான இயக்குநராக இருக்கிறார். நடிகருக்கு மட்டும் இல்லை, இயக்குநர்களுக்கே நிறைய பேருக்கு அவரை பிடித்திருக்கிறது. இந்தப் படத்தில் என்னுடைய கேரக்டரை ஏற்று நடிப்பது சிரமம். அதற்கு தனி பயிற்சி வேண்டும். ஆனால் நான் பயிற்சி எடுக்கவில்லை. படப்பிடிப்பிற்கு வந்து கற்றுக் கொண்டது தான். ஆனால் பண்ணுவதை அர்ப்பணிப்புடன் பண்ண வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான். அதற்காக ஒவ்வொரு நாளும் ஹோம் ஒர்க் செய்து எம்ஜிஆர் படங்களை திரும்பத் திரும்ப பார்த்து அவரை எப்படி கொண்டு வரலாம் என முயற்சி செய்வேன். அதற்கு இது போன்ற ஒரு டீம் மிகப்பெரிய சப்போர்ட்டாக அமைந்தது.
முதன் முதலில் நலன் கதை சொன்னபோது ஒரு சூப்பர் ஹீரோ போல படம் பண்ணனும் ஆனால் அதே சமயம் பொழுதுபோக்காகவும் மாடர்னாகவும் இருக்க வேண்டும், சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் என்பதால், கற்பனை கதாபாத்திரம் தான் இருக்க வேண்டும் என இல்லை, நம்ம சமூகத்திலேயே நிறைய சூப்பர் ஹீரோஸ் இருந்திருக்காங்க. எம்ஜிஆர், நிஜ வாழ்க்கையிலும் திரையிலும் ஒரு மாஸ் ஹீரோவாக இருந்திருக்கிறார். எதிர்பார்க்க முடியாத மனிதநேயமிக்க விஷயங்களை நிறைய செய்து இருக்கிறார். அவர் ஏன் திரும்ப வரக்கூடாது என யோசித்து கொண்டு வந்தது தான் வா வாத்தியார்.
வழக்கமாக படம் ரிலீஸ் ஆகும்போது ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோவிலில் நானும் ஞானவேலும் தரிசனம் செய்வோம். ஆனால் இந்த முறை எம்ஜிஆர் சமாதிக்கு செல்ல வேண்டுமென்று நினைத்தோம். முதலிலே பிளான் செய்தோம் ஆனால் ரிலீஸ் தள்ளிப் போனதால் இப்போது போனோம். அங்கு சென்று நிற்கும் போது அங்கு இருக்கும் உணர்வே வேறு. அவர் இறந்து 40 வருஷம் ஆகிவிட்டது. இருப்பினும் அவருடைய இமேஜ் இன்னும் ஸ்ட்ராங்காக இருக்கிறது. இந்த படம் நிறைய விஷயம் சேர்ந்து அமைந்ததற்கு அவருடைய ஆசியும் காரணம்” என்றார்.
Follow Us