கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வா வாத்தியார்’. இதில் நாயகியாக தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 12ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

Advertisment

இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கார்த்தி, “நலன் சொன்னது போலத் தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் என ஒரு படம் செய்து விட்டு, 10 வருடம் கழித்து தர்மம் வெல்லும் எனப் படம் செய்துள்ளார். நலனுக்கு தான் நிறைய இயக்குநர்களே ரசிகர்களாக இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் நலன் உடன் படம் செய்கிறீர்களா என ஆவலாகக் கேட்பார்கள். அவர் எல்லா இடத்திலும் ஸ்கோர் செய்து விடுகிறார். அரசியல்வாதியைக் கடத்துவது போல ஒரு கதை சொல்வார் என நினைத்தால் வா வாத்தியார் கதை சொன்னார். இது எப்படி நம்மால் செய்ய முடியும் என பயமாக இருந்தது. எவ்வளவு ஜெயித்தாலும் நாம் தோற்றதைப் பற்றித்தான் பேசுவார்கள் அதனால் துணிந்து செய்து விட வேண்டும் என ஒத்துக்கொண்டேன். 

Advertisment

நலன்  70, 80 கமர்ஷியல் படங்களுக்கு அர்ப்பணிப்பாக இப்படத்தைச் செய்துள்ளார். இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது. அவர் தன் ஆளுமையை மக்கள் மத்தியில் நல்லவிதமாகக் கொண்டு சேர்த்தவர். அவர் படங்களில் தம்மடிக்க மாட்டார் தண்ணியடிக்க மாட்டார் அதை தன் ரசிகர்களும் சொல்லிக்கொடுத்து அப்படியே இருக்கச் செய்தவர். எப்படி இப்படி  ஒரு மனிதர் இருந்தார்  என வியக்க வைத்தவர். ‘இருந்தாலும் பிரிந்தாலும் பேர் சொல்ல வேண்டும்,  இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்’ என பாடி வைத்து விட்டு போய் விட்டார். இன்று சென்னை ரயில் நிலையத்தில் 5000 முறை அவர் பேர் சொல்கிறார்கள். இன்றும் அவர் பற்றி பேசுகிறோம்.  அவர் ரசிகர்கள் அன்புடன், அவர் ரசிகர்களின் அன்பிற்கான கடனாகவே ரசிகர்களுக்காகத் தான் இந்தப்படத்தில் நடித்தேன்.  

நலன் அவரைப்பற்றி பெரிய ஆராய்ச்சி செய்து படம் எடுத்துள்ளார். 90 கிட்ஸ் சொல்வது போல நலன் யாருனு இந்தப்படம் வந்த பிறகு தெரியும். மலையாளம் போல நம் தமிழ் சினிமாவில் இல்லையே எனத் தோணும். நாமும் புதிதாக முயற்சிக்க வேண்டும். அதற்கு நலன் மாதிரி இயக்குநர் வேண்டும். இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும். ஒவ்வொருவரும் அவ்வளவு கடின உழைப்பைத் தந்துள்ளார்கள். சத்யராஜ் மாமா திரும்பவும் ஸ்பெஷலாக  மொட்டை பாஸாக நடித்துள்ளார். ராஜ்கிரண் ஒரு எம் ஜி ஆர் பக்தராக நடித்துள்ளார். கிருத்திக்கு முதல் தமிழ்ப்படம் சூப்பராக நடித்துள்ளார். சந்தோஷ் சூப்பரான இசையைத் தந்துள்ளார். எல்லோரும் பெரும் உழைப்பைப் போட்டு உருவாக்கியுள்ள படம். நம் தமிழ் சினிமாவுக்கு பெருமையாக இந்தப்படம் இருக்கும். ஞானவேலுக்கு இந்தப்படம் பெரிய லாபம் தரக்கூடிய படமாக வெற்றியைத் தரட்டும். புரட்சித் தலைவரின் ஆசியுடன் இந்தப்படம் ஜெயிக்க வேண்டும்” என்றார். 

Advertisment