மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' திட்டம், நேற்று விழாவுடன் தொடங்கியது. சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பல்வேறு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினில் நடிகர் கார்த்தியும் கலந்து கொண்டார்.
அவர் மேடையில் பேசியதாவது, “நான் சினிமாவுக்கு வருகிறேன் என சொன்னதும், என் அப்பா, ‘சினிமா நிலை இல்லாத தொழில், அதனால் படித்துவிடு, எது கைகொடுக்கவில்லை என்றாலும் படிப்பு கை கொடுக்கும்’ என்றார். அதனாலேயே இன்ஜினியரிங் முடிச்சிட்டு மேற்படிப்பு படித்தேன். அதன் பிறகு சினிமாவுக்கு வந்துவிட்டேன், அது வேறு. கல்வி என்பது வெறும் மார்க், டிகிரி வாங்கிய பிறகு முடிவது இல்லை. இன்ஜினியரிங் முடித்து விட்டு எனக்கு என்ன தெரியும் என நான் எனக்குள் யோசித்த போது ஒன்றுமே தெரியவில்லை. அதனால் ஒவ்வொரு வருடமும் நாம் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பரிசீலித்து கொண்டே இருக்க வேண்டும்.
காலேஜ் முடித்துவிட்டு வெளியே வரும் போது வாழ்க்கை நாம் நினைத்தது போல் இருக்காது. நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை கல்வி தான் நமக்கு சொல்லிக் கொடுக்கும். அதனால் கல்வியை கெட்டியாக பிடித்து கொள்ளுங்கள். அப்படி பிடித்துவிட்டால் வாழ்க்கையில் நமக்கு எந்த பயமும் இருக்காது. நான் அமெரிக்காவில் படித்த போது அங்கு நிறைய பேர் அரசு பள்ளியில் படித்தவர்கள் வந்திருந்தார்கள். அப்போது அது ஆச்சர்யமாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. கல்வியால் வாழ்க்கையும் சமூகமும் மாறுவதை கண்முன் நாம் பார்த்து வருகிறோம்.
எல்லா காலகட்டத்திலும் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பது முக்கியமானது. ஏஐ வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் அரசு மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுப்பது முக்கியமான தருணமாக நினைக்கிறேன். இதை எந்தளவு சரியாக பயன்படுத்துவதை பொறுத்து தான் அவர்களின் வாழ்க்கை மாறப்போகிறது” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/06/489-2026-01-06-15-26-51.jpg)