காந்தாரா பட வெற்றியைத் தொடர்ந்து அதன் முந்தைய கதையை வைத்து உருவாகியுள்ள ‘காந்தாரா ஏ லெஜண்ட் - சாப்டர் 1’ படம் கடந்த 2ஆம் தேதி கன்னடம், தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியானது. ஹொம்பாலே நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவயா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். 
   
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இதுவரை உலகளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக படத்தின் பிரம்மாண்ட காட்சிகளும் விஷுவல் எஃபெக்ட்ஸும் பிரம்மிப்பூட்டும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்கின்றனர். இதனிடையே படம் பார்க்கும் சில ரசிகர்களுக்கு சாமி வரும் காட்சிகளும் சமூக வலைதளத்தில் வெளியானது. மேலும் படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரம் போல் திரையரங்குகளில் மேக்கப் போட்டுக் கொண்டு சிலர் உலா வரும் காட்சிகளும் வெளியானது. 

Advertisment

இந்த நிலையில் படக்குழு சார்பில் தயாரிப்பு நிறுவனம், ஒரு கோரிக்கை வைத்துள்ளது. அதாவது படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரம் போல் நிஜத்தில் யாரும் அப்படி மேக்கப் போட்டுக்கொண்டு திரையரங்கிற்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கர்நாடகத்தின் கடலோரப் பகுதியான துலுநாட்டில் நம்பிக்கை மற்றும் கலாச்சார பெருமையின் ஆழமான அடையாளமாகத் திகழும் தைவரதனேவின் பக்தியையும் மரியாதையையும் கொண்டாடும் நோக்கில் காந்தாரா மற்றும் காந்தாரா சாப்டர் 1 படங்கள் தயாரிக்கப்பட்டன. துலு மண்ணின் முக்கியத்துவத்தையும் பாரம்பரியத்தையும் உலகிற்கு வெற்றிகரமாகப் பரப்புகிறோம்.

Advertisment

படத்திற்கு வரும் பாசிட்டிவாக விமர்சனங்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஆனால் அதே சமயம், சில நபர்கள் திரைப்படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரம் போல் வேடம் அணிந்து கொண்டு கூட்டம் கூடும் பொது இடங்களில் தவறாக நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் நாங்கள் கவனித்தோம். எங்கள் படத்தில் வரும் தைவரதனே அல்லது தெய்வ வழிபாடு, ஆழமான ஆன்மீக மரபில் வேரூன்றியுள்ளது. மாறாக சாதாரண வகையில் மிமிக்ரி செய்வதற்கும் நடித்து காண்பிப்பதற்கும் அல்ல. அப்படி செய்வது துலு சமூகத்தின் மத உணர்வுகளையும் நம்பிக்கையையும் புண்படுத்துவதற்கும் சமமாகும். எனவே, திரையரங்குகளிலோ அல்லது பொது இடங்களிலோ சாமி வேடமிட்டு தவறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வேண்டுகோள் வைக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.