காந்தாரா பட வெற்றியைத் தொடர்ந்து அதன் முந்தைய கதையை வைத்து உருவாகியுள்ள ‘காந்தாரா ஏ லெஜண்ட் - சாப்டர் 1’ படம் கடந்த 2ஆம் தேதி கன்னடம், தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியானது. ஹொம்பாலே நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவயா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று முதல் வாரத்தில் உலகளவில் ரூ.509 கோடி வசூலித்துள்ளது. பின்பு இரண்டு வாரத்தில் ரூ.717 கோடிக்கு மேல் வசூலித்தது. படத்தின் பிரம்மாண்ட காட்சிகளும் விஷுவல் எஃபெக்ட்ஸும் பிரம்மிப்பூட்டும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். சமீபத்தில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருந்தார். பின்பு இந்தியக் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் அல்லு அர்ஜூன் உட்பட பலரும் படத்தை பாராட்டி தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இப்படத்தின் வெற்றி தற்போது ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டு வெளியிடும் அளவிற்கு சென்றுள்ளது. வரும் 31ஆம் தேதி ஆங்கில வெர்ஷன் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகின்ற 31ஆம் தேதி இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபகாலமாக ஒரு படம் திரையரங்கில் வெளியாகி 40 நாட்கள் கடந்த நிலையிலேயே ஓடிடி-யில் வெளியாகி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதுவும் திரையரங்கில் நன்றாக வசூல் செய்துகொண்டிருக்கும் படம் கொஞ்சம் தாமதாகவும் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு உதாரணமாக மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற லோகா படம் 40 நாட்களுக்கு மேல் கடந்து வருகின்ற 31ஆம் தேதி தான் ஜியோ ஹாட்ஸ்டரில் வெளியாகவுள்ளது.
இந்த சூழ்நிலையில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் காந்தாரா 2 படம் திடீரென 40 நாட்களுக்குள் ஓடிடியில் வெளியாகவுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us