32 வயது மதிக்கத்தக்க கன்னட சின்னத்திரை நடிகை ஒருவர், தான் ரகசியமாக படம் பிடிக்கப்பட்டு பின்னர் மிரட்டப்படுவதாக பெங்களூரு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “பிப்ரவரி 7ஆம் தேதி பெங்களூருவில் உள்ள கோரமங்கலா உள் விளையாட்டு அரங்கில் ஒரு நிகழ்ச்சிக்காக கலந்து கொண்டிருந்தேன். அப்போது பெண்கள் கழிவறையை பயன்படுத்தும் போது அடையாளம் தெரியாத ஒரு மர்ம நபர் என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து, பின்பு அதனை என் தோழியுடைய இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு அனுப்பினார்.
அந்தக் கணக்கு என்னுடையது என்று தவறாக நினைத்து அந்த மர்ம நபர் இதனை அனுப்பினார். மேலும் இன்னும் வீடியோக்களை வெளியிடுவேன் எனவும் மிரட்டி பணம் கேட்டார். அப்படி பணம் கொடுக்கா விட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும் பிளாக் மெயில் செய்தார். இது என் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் செயல். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அந்த மர்ம நபர் பீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்புகாரை பெற்றுக் கொண்ட பெங்களூரு சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். வீடியோ பகிரப்பட்ட இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை வைத்து குற்றம் சாட்டப்பட்டவரை தேடும் பணியில் இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us