இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிரபல ஆங்கில ஊடகத்தில் சமீபத்திய பேட்டியில் பாலிவுட் திரையுலகில் மத ரிதியிலான பாகுபாடுகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். அவர் அந்த பேட்டியில் கூறியதாவது, “பாலிவுட்டில் படைப்பாற்றல் இல்லாத மனிதர்கள் கையில் அதிகாரம் சென்றுள்ளது. அவர்கள் தான் யார் இசையமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் இந்த மாற்றம் மிகப்பெரியதாக இருக்கிறது. நான் வேலைக்காக யாரையும் தேடி செல்வதில்லை. வேலையில் இருக்கும் நேர்மை தான் எனக்கு வாய்ப்புகளை தேடித் தருகிறது. எனக்கு வாய்ப்புகள் குறைவதற்கு மத ரீதியான பாகுபாடு காரணமாக இருக்கலாம். ஆனால் அது என் முகத்துக்கு நேராக நடந்ததில்லை. ஆனால் அது போன்ற தகவல்கள் என் காதுக்கு வருகிறது.
90களில் ரோஜா, பம்பாய், தில் சே போன்ற படங்களை விட ‘தாள்’ படம் தான் வட இந்தியாவில் என்னுடைய இசையை ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்த்தது. ஆனால் அப்போது நான் இந்தி பேசியதே இல்லை. ஒரு தமிழராக தமிழ் மீது மிகுந்த பற்று இருப்பதால் இந்தி கற்றுக் கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் இயக்குநர் சுபாஷ் கய் என்னை நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்று இந்தி கற்றுக்கொள்ள சொன்னார். நானும் சரி என சொல்லி இந்தியோடு சேர்த்து இந்திக்கு தாயாக விளங்கும் உருது மொழியையும் கற்றுக் கொள்கிறேன் என்றேன்” என்றார்.
இந்த நிலையில் நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான கங்கனா ரனாவத் தற்போது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “ஏ.ஆர். ரஹ்மான் ஜி, நான் ஒரு காவி கட்சியை ஆதரிப்பதால் திரையுலகில் நான் மிகுந்த பாரபட்சத்தையும் பாகுபாட்டையும் எதிர்கொள்கிறேன், ஆனாலும், உங்களை விட அதிக பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒரு மனிதரை நான் சந்தித்ததில்லை.
எனது இயக்கத்தில் உருவான 'எமர்ஜென்சி' திரைப்படத்தின் கதையை உங்களிடம் சொல்ல நான் மிகவும் விரும்பினேன், கதை சொல்வது இருக்கட்டும், நீங்கள் என்னை சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள். அதற்கு, நீங்கள் ஒரு பிரச்சாரப் படத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்று என்னிடம் கூறப்பட்டது. முரண்பாடாக, 'எமர்ஜென்சி' திரைப்படம் அனைவராலும் ஒரு தலைசிறந்த படைப்பு என்று பாராட்டப்பட்டது, எதிர்க்கட்சித் தலைவர் கூட அதன் சமநிலையான மற்றும் இரக்கமான அணுகுமுறையை பாராட்டினார். ஆனால் நீங்கள் உங்கள் வெறுப்பால் குருடாகிவிட்டீர்கள். உங்களுக்காக நான் வருந்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘எமர்ஜென்சி’ படம் கடந்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி வெளியானது. இப்படம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ஆட்சியில் இருக்கும்போது அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்திருந்தார். இவருடன் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் மோசமான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/17/10-44-2026-01-17-19-23-12.jpg)