பிரபல ஓடிடி நிறுவனமான ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் தயாரிக்கும் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சாமிநாதன் மற்றும் நடிகர்கள் கமல்ஹாசன், மோகன்லால், நாகர்ஜூனா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
நிகழ்வில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் மொத்தம் 40 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக நான்கு தென் மாநிலங்களில் ரூ.12,000 கோடி முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ.4,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
நிகழ்வில் கமல்ஹாசன் பேசுகையில், “இன்றைய காலகட்டத்தில் கதைகள் உண்மையிலேயே திரைக்கதைகளை தாண்டி பார்வையாளர்களுடன் பயணிக்கின்றது. பிராந்தியம் என்பது புதிய தேசியமாகவும் இனம் என்பது புதிய சர்வதேசமாகவும் மாறி வருகிறது. மதுரை, மலப்புரம், மண்டியா அல்லது மச்சிலிம்பட்டினத்தில் இருந்து பிறந்த கதைகள் பிராந்திய சினிமா என்பதை தாண்டி அவை தேசிய கலாச்சார நிகழ்வுகளாக மாறுகிறது. காந்தாரா போன்ற கடலோர கர்நாடகாவின் நாட்டுப்புறக் கதைகளில் வேரூன்றிய ஒரு படம் முழு நாட்டையும் ஜொலிக்க வைக்க முடியும். மலையாள மிஸ்ட்ரி படமான த்ரிஷ்யம், ஒரு சாதாரண மனிதன் அசாத்திய சக்தியை விஞ்சுகிறான், சிரமமின்றி எல்லைகளைக் கடக்கிறான். பாகுபலி அல்லது புஷ்பா போன்ற தெலுங்கு படங்கள் மும்பையிலிருந்து அன்றாட சொற்களஞ்சியமாக மாறுகிறது, அதாவது மலேசியாவிலும் கூட. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விக்ரம் மற்றும் அமரன் படங்கள் பட்ஜெட்டை தாண்டி நேர்மையை காட்டுகிறது. ஸ்குவிட் கேம் என்ற இணைய தொடர் உலகம் முழுவதும் பலகோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது. அதனால் சினிமாவுக்கு மொழி தேவையில்லை” என்றார்.
Follow Us