நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடப்பாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், மாநிலங்களவையில் நேற்று பேசினார்.
அப்போது ஆங்கிலத்தில் பேசிய அவர், முன்னாள் முதல்வர் அண்ணா குறித்தும் எஸ்.ஐ.ஆர். குறித்தும் தமிழ் மொழி குறித்தும் ஏஐ குறித்தும் பேசியிருந்தார். பின்பு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய தமிழ் படித்தால் யாசகம் கூட கிடைக்காது என்ற பேச்சிற்கு பதிலடி தரும் வகையில் தமிழில் பேசிய அவர், “நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகுதான் உங்கள் யாசகம் பாத்திரம் உருவாக்கப்பட்டது. யாசகம் குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து தமிழ் யாசகம் எடுக்கக்கூட உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் யாசகம் எடுக்கலாமே... தமிழ் யாசகம் எடுக்க உதவாது, திருடவும் உதவாது.
தமிழன் யாசகம் எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் யாசகத்தை ஏற்கவே மாட்டான். ஓட்டையும் நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக'. எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பம் வீட்டைச் சுடுக. 'வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன். தமிழ் என்றும் வாழும் நலமுடன்” என்றார்.
இந்த பேச்சு பலரது கவனத்தை பெற்றது. அதுவும் கமலின் முதல் நாடாளுமன்ற பேச்சே இந்தளவு கவனம் பெற்றது அவரது ரசிகர்களும் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நிதியமைச்சருக்கு பதிலடி கொடுத்த பேச்சால் கமலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் கவிஞர் வைரமுத்துவும் கமல்ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதற்கு கமல் நன்றியும் தெரிவித்துள்ளார். இதனை வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து கமல் நன்றி கூறிய ஆடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“அன்புள்ள
கமல் எம்.பி அவர்களே!
கன்னிப் பேச்சல்ல;
காளைப் பேச்சு
ஒரு தேசியவாதியின் மொழி
ஆனால்,
தமிழச் சாதியின் குரல்
நாடாளுமன்றமே
நிமிர்ந்து அமர்ந்தது
தாடிச் சிங்கத்தின்
தமிழ் கேட்டும்;
ஆங்கிலம் கேட்டும்
என்னையறியாமல்
மீசை முறுக்கின
என் கட்டை விரலும்
சுட்டு விரலும்
காடு அதிரட்டும்
களிறே பிளிறு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நன்றி ஆடியோவில் கமல் பேசியதாவது, “நண்பரே, கவிஞரே... நீங்கள் சொல்லாததையா நான் சொல்லப் போகிறேன். அவை எதுவாயினும் பேச்சு ஒன்றுதானே. திராவிடர், தோழா, நண்பா, சகோதரா, உறவே, தமிழே” என்றுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/05/16-52-2026-02-05-15-45-06.jpg)