தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் வேல்ஸ் வர்த்தக மையம், வேல்ஸ் ஃபிலிம் சிட்டி மற்றும் வேல்ஸ் திரையரங்கம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் எம்.பி. கமல்ஹாசன் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்வில் கமல்ஹாசன் பேசியதாவது, “இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி. கல்வித்துறையில் யாரை கேட்டாலும் ஐசரி கணேஷை தெரியும் என்பார்கள். கலைத் துறையில் கேட்டாலும் அவரை தெரியும் என சொல்வார்கள். அதே போல் அரசியலில் கேட்டாலும் கட்சி வித்தியாசம் இல்லாமல் அவரை தெரியும் என்று சொல்வார்கள். நானும் அவருமே நண்பர்கள் தான். ஆனால் அதை பெரிதாக நான் பறைசாற்றியது கிடையாது. எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? வேல்ஸ் நிறுவனத்தில் நான் நடித்ததில்லை. என்னுடைய ராஜ் கமல் நிறுவனம் அவருடன் கூட்டணி வைத்ததில்லை. ஆனால் என்னையும் அவரையும் சேர்த்தது எம்ஜிஆர். அவர்தான் எங்களை நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் மாற்றினார்.
என்னை மேடையில் ஏதேதோ பட்டங்கள் சொல்லி வரவேற்றார்கள். ஆனால் என்னுடைய உண்மையான முகவரி நான் ஒரு சினிமா குழந்தை. சினிமாவை தவிர்த்து வேறு எதுவும் எனக்கு தெரியாது. அதை செய்து கொண்டிருக்கும்போது தான் மொழி, கல்வி, பட்டம் எல்லாமே கற்றுக்கொண்டது. அப்படிப்பட்ட ஒரு சினிமா தேய்ந்து கொண்டு போவது போல் 20 வருடங்களுக்கு முன்னால் ஒரு பயம் வந்தது. ஆசியாவிலேயே மிகப்பெரிய ஸ்டூடியோவாக 17 தளங்களைக் கொண்டிருக்கும் ஒரு ஸ்டூடியோவை பார்த்தேன். பின்பு பொறாமைப்பட்டு சரவணன் சாரிடம் 20 தளங்களைக் கொண்டு நம்ம ஸ்டூடியோவை உருவாக்கலாமா... அப்போது நம்ம தானே ஆசியாவில் பெரிய ஸ்டூடியோவாக இருப்போம் என சின்னப் பையனாக இருக்கும் போது சொல்லி இருக்கிறேன். அதற்கு அவர் அந்த பத்து தளத்தை நீ பார்த்துக்குவியா எனக் கேட்டார். நான் பயந்து போய் முடியாது என்று சொல்லிவிட்டேன். இப்போது அந்த பொறுப்பு சுஷ்மிதாவுக்கு வந்திருக்கிறது.
ஐசரி கணேஷ், 20 தளத்தில் ஒரு ஸ்டூடியோவை கட்டி ஆசியாவின் மிகப்பெரிய ஸ்டுடியோவை இங்கு கட்டியுள்ளார். இங்கு இருப்பது நியாயம்தான். காரணம் பான் இந்தியா மூவி தொடங்கியதே சென்னையில் தான். மும்பையிலும் ஒரு பெரிய இண்டஸ்ட்ரி இயங்கிக் கொண்டிருக்கிறது, ஆனாலும் அவர்கள் அவர்களின் மொழியில் மட்டுமே படம் எடுப்பார்கள். ஆனால் இங்கு பல மொழிகளில் படம் எடுத்துள்ளார்கள். அதை அங்கு கொண்டு சென்று கொடியும் நாட்டு வந்திருக்கிறார்கள். உலகத்தில் அதிகமான சினிமாக்களை தயாரிக்கும் இந்த நாட்டில் இப்படி ஒரு இடம் இருக்க வேண்டியது அவசியம். இதை அரசு முடிவு செய்யாமல் தனி மனிதன் முடிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. இதை நாங்கள் அல்லவா செய்திருக்க வேண்டும் என இங்கிருக்கும் சினிமாக்காரர்கள் எல்லாரும் மனதிலும் தோன்றியிருக்கும். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. எவ்வளவோ படம் நடித்திருக்கிறோம், நிறைய சினிமாக்களை பேசுகிறோம்...ஆனால் இப்படி ஒரு ஸ்டூடியோ கட்ட வேண்டும் என்று பேசி தான் இருக்கிறேனே தவிர அதை செய்யவில்லை. ஆனால் ஐசரி கணேஷ் செய்திருக்கிறார். ஒரு சகோதரன் செய்ய மறந்ததை இன்னொரு சகோதரன் செய்திருக்கிறார்
நான் பெரிதாக மாறுதட்டி ஒரு முகவரியை சொல்ல வேண்டும். அது இந்த ஸ்டூடியோவாக இருப்பதில் எனக்கு பெருமை. நான் ஏவிஎம் ஸ்டுடியோவில் சினிமா கற்றுக் கொண்டேன். அது இல்லாமல் போயிருந்தால் நான் என்ன செய்து கொண்டிருப்பேன் என யோசித்துப் பார்த்தால் கால் கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்த நடுக்கம், வரும் தலைமுறையினருக்கு இல்லாமல் இருக்க இங்கு ஒரு சினிமா பயிலகத்தையும் ஏற்படுத்த வேண்டும். காரணம் அதற்கான ஏற்பாடுகளை நான் செய்ய மறந்து விட்டதாகவே நினைக்கிறேன். நான் சொல்வது அரசாங்கத்தை சொல்லவில்லை. சினிமா துறையை சொல்கிறேன். அவர்கள் இதை செய்திருக்க வேண்டும். இது முன்னாடியே எனக்கு தெரியும். ஆனால் செய்வதற்கு வசதி இல்லை. வசதி இருப்பவர்களை அப்போது எனக்கு தெரியவில்லை. இப்போது தான் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இவர்கள் தமிழ் சினிமாவுக்காகவும் தமிழ் நாட்டிற்காகவும் நல்லது செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/11-22-2025-12-13-19-49-14.jpg)