சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம். 

Advertisment

இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. குறிப்பாக அனல் தெறிக்கும் வசனங்கள் பலரது கவனம் பெற்றது. மேலும் முன்னாள் முதல்வர் அண்ணா கதாபாத்திரம் தோன்றியது சிறப்பம்சமாக அமைந்தது. இதனால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாக, சான்றிதழ் கிடைக்காமல் கொஞ்சம் இழுபறி நீடித்தது. ஆனால் 25 திருத்தங்களுடன் யு/ஏ சான்றிதழ் பின்பு வழங்கப்பட்டது.  

Advertisment

இப்படம் இன்று(10.01.2026) தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் ரவி மோகன், ஷாலினி அஜித்குமார், ஸ்ரீ லீலா, சிவகார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினர் என பிரபலங்களும் கண்டுகளித்தனர். இந்த நிலையில் நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன், படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த் தீ பரவட்டும்! அன்புள்ள இளவல், தமிழ்நாடு நுணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினுக்கு, பராசக்தி படத்தைப் பார்க்கத் தொடங்கும் முன் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்தப் படம் நம் கூட்டணி எதிர்கொள்ளப்போகும் தேர்தலின் மாபெரும் முரசொலியாகப் போகிறது என்று. ஆம், இந்தப் படம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது என் ஆசை மட்டுமல்ல. என் உண்மையான வாழ்த்தும் கூட இந்தப் படம் திமுக வரலாற்றுக்கு இட்ட வெற்றித் திலகம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், பின் குறிப்பு என்று இன்னும் சிலவற்றை பகிர்ந்துள்ளார். அதில் “பின்னால் வந்தாலும் முந்திச் சொல்ல வேண்டியது, உணர்ச்சி முந்திக்கொண்டதால் பின்தங்கிய குறிப்பு இது. முதல் பாராட்டு இந்த பயோஃபிக்ஷன் கதையையும், இதன் இயக்குனர் சுதா கொங்கராவையும், இக்கதையைத் தேர்ந்து இதற்காக உழைத்து வெற்றியும் காணப்போகும் தம்பி சிவகார்த்திகேயனையும் சேரும். இந்தச் சினிமாச் சரித்திரத்தில் இணைந்துவிட்ட ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும். ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், எடிட்டர் சதீஷ் சூரியா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மற்றும் இந்தப் படத்துக்காக உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்” என்றுள்ளார். 

Advertisment