நடிகரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் (உரிமையியல்) வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், “சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம் எனது புகைப்படம், பெயர், உலக நாயகன் என்ற பட்டத்தையும், எனது பிரபல வசனத்தையும் எனது அனுமதியின்றி பயன்படுத்தி டீஷர்ட்டுகளையும், ஷர்ட்டுகளையும் வணிக ரீதியாக விற்பனை செய்து வருகிறது. இதற்குத் தடை விதிக்க வேண்டும்.
அதோடு, ‘நீயே விடை’ என்ற நிறுவனம் மட்டுமில்லாமல் வேறு எந்த நிறுவனங்களும் என்னுடைய பெயர், புகைப்படம், பட்டங்களையும், வசனங்களையும் பயன்படுத்தத் தடைவிதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், கமல்ஹாசன் பெயர் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை அனுமதியின்றி, வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த உத்தரவு குறித்து தமிழ், ஆங்கில பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என கமல் தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதே போல், மனுவுக்கு நீயே விடை நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைத்தார். அதோடு கார்ட்டூன்களில் கமல் படத்தை பயன்படுத்த எந்த தடையும் இல்லை எனவும் உத்தரவிட்டுள்ளார்.
Follow Us