விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று (09.01.2026) வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணையில் யு/ஏ சான்றிதழ் வழங்கக்கோரி நீதிபதி ஆஷா தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, நீதிபதி ஆஷா வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இந்த நிலையில் தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகளை பலரும் கண்டித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வரிசையில் தணிக்கை வாரியமும் பாஜக அரசின் ஆயுதமாக மாறியுள்ளதாக கண்டனம் தெரிவித்திருந்தார். காங்கிரஸும் பா.ஜ.க அரசு தான் தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கு காரணம் என விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தது. திரை பிரபலங்களும் விஜய்க்கு ஆதரவாக வெகுண்டெழுந்து குரல் கொடுத்து வருகின்றனர். இதுவரை இயக்குநர்கள் அஜய் ஞானமுத்து, ரத்ன குமார், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், விக்ரமன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ்... நடிகர்கள் சிபி சத்யராஜ், ரவி மோகன், சிம்பு, சாந்தனு, ஜெய்... நடிகை சனம் ஷெட்டி உள்ளிட்ட பெரும்பாலான தமிழ் திரையுலகுமே குரல் கொடுத்தது.
இந்த நிலையில் நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “இந்திய அரசியலமைப்புச் சட்டம், கருத்துச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இது எந்த ஒரு திரைப்படத்தையும் விடப் பெரியது. மேலும் அரசியலமைப்பு ஜனநாயகத்தில் கலைக்கும் கலைஞர்களுக்கும் நாம் வழங்கும் இடத்தையே பிரதிபலிக்கிறது. சினிமா என்பது ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல, எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் நியாயமான மற்றும் சரியான நேரத்திலான செயல்முறையை நம்பி வாழும் சிறு வணிகங்கள் அடங்கிய ஒரு சூழல் அமைப்பின் கூட்டு முயற்சியாகும்.
தெளிவு இல்லாதபோது, ​​படைப்பாற்றல் கட்டுப்படுத்தப்படுகிறது, பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன, மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை பலவீனமடைகிறது. தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உள்ள சினிமா ரசிகர்கள் கலைகளின் மீது பேரார்வமும் பகுத்தறிவு தன்மையும் முதிர்ச்சியையும் கொண்டுள்ளனர். அவர்களை மதிக்க வேண்டும். அதனால் இப்போது தேவைப்படுவது, சான்றிதழுக்கான வரையறுக்கப்பட்ட காலக்கெடு. மேலும் வெளிப்படையான மதிப்பீடு மற்றும் பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு வெட்டு அல்லது திருத்தத்திற்கும் எழுத்துப்பூர்வமான காரணத்துடன் கூடிய விளக்கம், சான்றிதழ் வழங்கும் செயல்முறைகளை ஒரு கொள்கை அடிப்படையில் மறுபரிசீலனை செய்வதே ஆகும்.
முழுத் திரைப்படத் துறையும் ஒன்றிணைந்து, நமது அரசாங்க நிறுவனங்களுடன் அர்த்தமுள்ள, ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான தருணமும் இதுதான். இத்தகைய சீர்திருத்தம் படைப்புச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும், அரசியலமைப்பு விழுமியங்களைக் காக்கும், மேலும் அதன் கலைஞர்கள் மற்றும் மக்கள் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும். மேலும் இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தும்” என்றுள்ளது.
Follow Us