தக் லைஃப் படத்தை தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கமல். இப்படத்தை அவரது ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் கமலின் 237வது படமாக உருவாகும் நிலையில் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்தது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. கமல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளதால் சற்று பிஸியாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை தவிர்த்து இந்தியன் 3 படத்தை அவர் கைவசம் வைத்துள்ளார்.
சமீபத்தில் கமலின் 237 வது படத்தில் மலையாள ஸ்கிரிப்ட் ரைட்டர் ஷ்யாம் புஷ்கரன் இணைந்திருந்தார். இவர் மலையாளத்தில் மகேஷிண்டே பிரதிகாரம்(ஸ்க்ரீன் ரைட்டர்), தொண்டிமுத்தாலும் த்ரிக்சாக்ஷியும்(வசனம் மற்றும் இணை இயக்குநர்), கும்பளங்கி நைட்ஸ்(ரைட்டர் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் அடுத்த அப்டேட் கமலின் பிறந்தநாளான இன்று வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களின் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்திற்கு இசை மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய். இவர் தமிழில் துருவங்கள் பதினாறு, மன்னர் வகையறா, போர்த் தொழில், உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக சுனில் கே எஸ் என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பிரித்விராஜ் நடித்த ஆடுஜீவிதம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர். தமிழில் இப்படம் மூலம் அறிமுகாகிறார். இதனை தெரிவித்த படக்குழு பட பணிகள் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இப்படத்தில் தொடர்ந்து மலையாள கலைஞர்களே கமிட்டாகி வருகின்றனர்.
இதனிடையே கமலுக்கு வீடியோ வாயிலாக திரைப் பிரபலங்கள் வரிசையாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதுவரை சத்யராஜ், சிவ ராஜ்குமார், நாகர்ஜூனா, ஜிவி பிரகாஷ், ஜெயராம், காளிதாஸ், அபிராமி, பாபி சிம்ஹா, ஹரிஷ் கல்யாண், பிரபு, இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், விக்னேஷ் சிவன், தொகுப்பாளினி மற்றும் நடிகை திவ்ய தர்ஷினி, ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், இயக்குநர் நாக் அஷ்வின், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் பிரேம் குமார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Follow Us