‘ஜெயிலர் 2’ படத்தைத் தொடர்ந்து ரஜினியின் புது படத்தை கமல் தயாரிப்பதாகவும் சுந்தர் சி இயக்குவதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இப்படம் ரஜினியின் 173 வது படமாக உருவாகும் எனவும் 2027ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் படத்தை வெளியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இப்படம் மூலம் முதல் முறையாக கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருந்தார். பின்பு அருணாச்சலத்திற்கு பிறகு மீண்டும் ரஜினியை சுந்தர் சி இயக்கவிருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுந்தர் சி இப்படத்தில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இது கோலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அறிவிப்பில் கனத்த இதயத்துடன் மற்றும் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சுந்தர் சி தெரிவித்திருந்தார். மேலும் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். சுந்தர் சி-யின் இந்த திடீர் விலகலால் இப்படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் எழுந்தது. அதில் இப்போதைக்கு வெங்கட் பிரபு, ராஜேஷ் எம் செல்வா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் பெயர்கள் அடிபடுகிறது. இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில் கமல்ஹாசன் சுந்தர் சி விலகியது குறித்து ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “இந்தப் படத்தில் நான் ஒரு முதலீட்டாளன். எனது நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை எடுப்பது தான் எனக்கு ஆரோக்கியம். அதைத்தான் பண்ணி இருக்கிறோம். ரஜினிக்கு பிடிக்கும் வரை கதை கேட்டு கொண்டே இருப்போம். கதை தான் முக்கியம். புதியவருக்கும் வாய்ப்பிருக்கிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்றார். இப்படம் அல்லாது ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கும் ஒரு படமும் உருவாகிறது. அப்படத்திற்கும் இருவரும் கதை கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us