56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா வழக்கம் போல் கோவாவில் இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். அதே வேளையில் தங்கமயில், வெள்ளிமயில் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான அமரன் திரைப்படம் திரையிடப்படுகிறது. மேலும் தங்கமயில் விருதுக்கு போட்டியிடுகிறது.
இந்த நிலையில் அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன் கோவா புறப்பட்டார். புறப்படும் முன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “விழாவிற்கு அழைப்பு விடுத்த மத்திய அரசுக்கு நன்றி. அரசியல் வேறு ஒன்றாக இருந்தாலும் சினிமா, நாடு என வரும்போது எல்லாரும் ஒன்றாக இருக்க வேண்டும். அதற்கு இது உதாரணம். நாட்டுக்கான படத்தை நாங்கள் எடுத்திருக்கிறோம். அதனால் நாடு மரியாதை கொடுக்க வேண்டும் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு. அது நியாயம்தானே. நாட்டைப் பற்றிய படங்களை தொடர்ந்து எடுப்பேன்” என்றார்.
அப்போது அவரிடம் மருதநாயகம் படத்தை எப்போது எதிர்பார்க்கலாம் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “எனக்கு மறுபடியும் செய்ய வேண்டும் என்பது ஆசை. பல தொழில்நுட்பம் முன்னேறி இருக்கும் இந்த காலத்தில் அதற்கும் சாத்தியம் என்பதுதான் என் நம்பிக்கை” என்றார்.
மருதநாயகம் படம் கமல்ஹாசனின் கனவு படங்களில் ஒன்று. 1997ஆம் ஆண்டு இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் அன்றைய முதல்வர் கலைஞர் மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். படப்பிடிப்பும் சில வாரங்கள் நடந்தது. இளையராஜா இசையில் படத்தின் டைட்டில் பாடலும் வெளியானது. கிட்டத்தட்ட ரூ.80 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது. அன்றைய சமயத்தில் இந்த பட்ஜெட் இந்திய சினிமாவில் அதிகமான படங்களில் தயாரிக்கும் படமாக இருந்தது. ஆனால் பட்ஜெட் பிரச்சனை காரணமாக அப்படம் கைவிடப்பட்டது. ஆனால் ரசிகர்கள் இப்படத்தின் மீதான ஆர்வத்தை விடவேயில்லை. தொடர்ந்து கமலிடம் இப்படம் குறித்தான கேள்விகளை முன்வைத்தே வருகின்றனர். அப்போதெல்லாம காலம் கைகூடினால் இப்படம் தயாராகும் என கமல் பதிலளித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
Follow Us