‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் கமல். இப்படத்தை அவரது ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இப்படத்தை தவிர்த்து இந்தியன் 3 படத்தை அவர் கைவசம் வைத்துள்ளார். 

Advertisment

இதனிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் கமல், சமீபத்திய கேரள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளித்தார். அப்போது அவரிடம் ஒரு செய்தியாளர், ‘தக் லைஃப் படத்தை கமல்ஹாசனின் கம்-பேக் படம் என அடையாளப்படுத்துவது சரியா? மற்றும் இன்றைய தலைமுறையினர் புதிய கூட்டணியை எதிர்பார்ப்பதால் மூத்த நடிகர்கள் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கமல், “புதிய கூட்டணி உருவாக வேண்டுவது முக்கியம். ஆனால் பழைய பிரபலங்களை ஓய்வு பெற சொல்வது உங்களின் வேலை...” என நகைச்சுவையாக சிரித்துக் கொண்டே பேசினார். 

Advertisment

தொடர்ந்து பேசிய அவர், “என்னிடம் யாரும் இதுவரை ஓய்வெடுக்க சொன்னதில்லை. ஆனால் நான் கேட்பேன்... மோசமான படங்களை செய்த பின்பு. அப்போது என் நண்பர்கள், ‘இதோடு நிறுத்தாதே... நல்ல படம் செய்துவிட்டு, பின்பு ஓய்வு எடு’ என்று சொல்வார்கள். நான் இன்னும் அப்படிப்பட்ட ஒரு நல்ல படத்தை தான் தேடிக் கொண்டிருக்கிறேன்” என முடித்துக் கொண்டார்.