தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்தின் அனைத்து பணிகளையும் நிர்வகித்து வந்தவர் ஏவிஎம் சரவணன். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என பல்வேறு முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை தயாரித்தவர். எப்போதும் கைகளைக் கட்டிக்கொண்டு பணிவுடனும் நட்போடும் பழகக்கூடியவர். இவர் இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நேற்று தான் தனது 86வது பிறந்தநாளை கொண்டாடிய அவர் அடுத்த நாளே உயிரிழந்திருப்பது தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது உடல் ஏவிஎம் பொதுமக்கள் அஞ்சலிக்காகக் ஏ.வி.எம். ஸ்டுடியோவின் மூன்றாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் கமல்ஹாசன் வீடியோ வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பேசிய வீடியோவில், “அண்ணன் ஏவிஎம் சரவணனுக்கும் எனக்குமான உறவு என் அண்ணன் சந்திரகாசன் சாருஹாசனுக்கும் எனக்கும் உண்டான உறவு போன்றது. இவர்களுக்கு எந்த மாதிரியான மரியாதை தருவது என ஒரு குழப்பம் என்னுடைய சிறுவயதில் ஏற்பட்டது உண்டு. அதை நான் 20 வயது தாண்டும் பொழுது உறுதியாகிவிட்டது. இவர்களுக்கு நான் கொடுக்க வேண்டிய மரியாதை ஒரு தகப்பனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை. அதனால் குகனுக்கு(சரவணன் மகன்) இருக்கும் சோகத்தில் எனக்கும் பங்கு இருப்பதாக நான் உரிமை கொண்டாடுகிறேன். இப்படி உரிமை கொண்டாடும் நான் தனி ஒருவன் அல்ல.
ஏவிஎம் என்னும் பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி இன்று வளர்ந்து வந்திருக்கிறேன். பெரும் கலைஞர்கள் விட்டுச்சென்ற அடி சுவற்றில் என் சிறு பாதத்தை எப்படி பதித்து நடக்க வேண்டும் என்று பல பெரிய ஆசான்கள் இந்த தோப்பில் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். பெயர் சொல்லும் பிள்ளையாக சரவணன் ஐயா இருந்திருக்கிறார்கள். அவருடைய சகோதரர்களும் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அது போன்ற ஒரு பிள்ளையாக நானும் இருக்க ஆசைப்படுகிறேன்.
என் ஆசையெல்லாம் இந்த தோப்பில் தோன்றியிருக்கும் மூன்றாம் தலைமுறைகளும் என்னைப் போன்ற பல செடிகளை நட்டு இந்த பெரும் தோப்பின் பெயர் நிலைத்திருக்க செய்ய வேண்டும். இதுதான் அன்னாரின் மக்களாக நாம் செய்யும் கடமை. மற்றபடி ஏவிஎம் வளாகத்தில் வேலை செய்து ஓய்வெடுத்தவர்களும் வேலை செய்ய விருப்பமுள்ளவர்களும் சிரமத்தில் இருக்கும் நிலையில் அதில் நானும் பங்கு கொள்கிறேன். வெளி உலகத்திற்கு இது போன்ற பின்னணியில் இருக்கும் ஆளுமைகளை தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. நாங்கள் அவரை வணங்குவதற்கான காரணம் எங்கள் வாழ்க்கையைப் பார்த்தாலே புரிந்துவிடும். அவருக்கு நன்றி சொல்லும் ஒரே வழி அவர் கண்ட பாதையில் வீர நடை போட்டு நடப்பது தான்” என்றுள்ளார்.
Follow Us