சமீப காலங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படங்கள் புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் மறு வெளியீடு (ரீ-ரிலீஸ்) செய்யப்பட்டு வருகின்றன. அப்படி வெளியாகும் படங்களும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன. அந்த வகையில், படையப்பா, ஆளவந்தான், கேப்டன் பிரபாகரன், கில்லி, மங்காத்தா மற்றும் சிலம்பாட்டம் போன்ற பல படங்கள் மறு வெளியீடு செய்யப்பட்டு, ரசிகர்களிடத்தில் வரவேற்பைப் பெற்று மீண்டும் ஒரு பெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளன. அந்த வகையில், வர இருக்கும் காதலர் தினத்தன்று சூர்யாவின் "மௌனம் பேசியதே" மற்றும் மாதவனின் "மின்னலே" போன்ற படங்கள் மறு வெளியீடு செய்ய இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.   

Advertisment

இந்த நிலையில், காதலர் தினத்தன்று "காதலர்தினம்" படமும் வெளியாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இப்படத்தில் குணால் மற்றும் சோனாலி பிந்த்ரே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் நாசர், மணிவண்ணன், சின்னிஜெயந்த், கவுண்டமணி உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தினை கதிர் இயக்கியிருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த 1999 ஏப்ரல் 14 அன்று வெளியானது. இப்படம் வெளியான நாள் முதல் இன்று வரை ரசிகர்களாலும், குறிப்பாகக் காதலர்களாலும் கொண்டாடப்படக்கூடிய படமாக உள்ளது. மேலும், இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.   

Advertisment

இந்த நிலையில், இந்த ஆண்டு காதலர் தினத்தன்று புதிய தொழில் நுட்பத்துடன் "காதலர் தினம்" மறு வெளியீடு செய்யப்பட்ட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வெளியிடுவதற்கு முன்பாக டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, காதலர்கள் கொண்டாடி வந்த "என்ன விலை அழகே...., காதலெனும் தேர்வெழுதி..., ஓ மரியா..." போன்ற பாடல்களைத் திரையில் பார்த்துக்  கொண்டாட மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த காதலர் தினத்தையொட்டி காதல் கதைகளை மையமாகக் கொண்ட பல படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.