‘காதல்’ படத்தில் நகைச்சுவை காட்சிகளில் கவனம் ஈர்த்தவர் சரவணன். சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக சொல்லி அவர் நடித்திருந்த கதாபாத்திரம் அவருக்கு அடையாளத்தை தந்தது. இவர் ஓரு மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை நந்தன் பட இயக்குநர் சரவணன் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் சரவணன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சசிகுமார், சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்ட என் பேரன்புப் பட்டியலில் இருக்கும் சினிமா மனிதர்களில், அவர்களைத் தாண்டிய இடத்தில் ‘காதல்’ சரவணனை வைத்திருக்கிறேன் என்றால், உங்களால் நம்ப முடியுமா?
எப்போதுமே ஒரே பெயர் கொண்டவர்கள் மீது இயல்பாகவே ஈர்ப்பு அதிகமாகிவிடும். அந்த வகையில்கூட நடிகர் ‘காதல்’ சரவணன் மீது எனக்கு பெரிய அளவில் நட்போ பிரியமோ வரவில்லை. என் முதல் படமான ‘கத்துக்குட்டி’யில் அவர் நடித்த போதுதான் பழகவே தொடங்கினோம். தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிற மனிதர். படம் முடிகிற தறுவாயில்தான் கொஞ்சமே கொஞ்சமாகப் பேசத் தொடங்கினோம்.
பல சந்திப்புகளுக்குப் பிறகு அவரின் தன்மையும் பக்குவமும் பிடித்துப்போய் நிறைய பேசத் தொடங்கினேன். இன்றைக்கு என் பத்து விரல்களுக்குள் அடங்கிவிடுகிற வியப்பான திரை மனிதர்களில் என் மூன்றாவது விரல் காதல் சரவணனுக்குத்தான்! ஒரு காமெடி நடிகராக மட்டுமே பார்க்கப்படும் ‘காதல்’ சரவணன், அன்பும் வாஞ்சையுமான அற்புதன். திருமண வாழ்வு குறித்து அவர் சொன்னது மிக முக்கியமானது.
அவருடைய அறையில் தங்கியிருந்த நண்பன் ஒருவனுக்குப் பெண் பார்க்கும் படலம். மாப்பிள்ளைக்குத் துணையாக சரவணன் அங்கு போயிருக்கிறார். மணமகள் மாற்றுத் திறனாளி. வரதட்சணை குறித்த பேச்சு எழுந்திருக்கிறது. மாப்பிள்ளை கேட்ட இரண்டு லட்ச ரூபாய் வரதட்சணையைப் பெண் வீட்டாரால் கொடுக்க முடியவில்லை. தங்களின் எளிய வாழ்வைச் சொல்லி அந்தக் குடும்பம் கலங்கி இருக்கிறது. அலங்கரித்து நின்ற அந்தப் பெண் உடலாலும் மனதாலும் தான் படும் துயரத்தைச் சொல்ல முடியாமல் தத்தளித்து இருக்கிறார். இரண்டு லட்ச ரூபாய்க்கு வழியில்லாததால், பெண் பார்க்கும் படலம் பாதியிலேயே நின்றுவிட்டது.
மாப்பிள்ளைக்குத் துணையாகப் போன சரவணனை இந்தத் துயரம் பெரிதாகப் பாதித்துவிட்டது. வரதட்சணை இல்லாமல் அந்தப் பெண்ணைக் கட்டிக்கொள்ளச் சொல்லி நண்பனிடம் பேசி இருக்கிறார். நண்பன் தன் நெருக்கடியான சூழலைச் சொல்லித் தவிர்க்க, ஒரு திரைப்படத்தின் காட்சியாகக்கூட எழுத முடியாத திருப்பத்தைத் தன் வாழ்வில் எழுதி இருக்கிறார் சரவணன். கண்ணீரும் துயருமாய் தன் கண்ணை விட்டு அகலாத அந்த மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு போன் பண்ணி இருக்கிறார். “நான் உங்களைத் திருமணம் செய்து கொள்கிறேன். வரதட்சணையாக ஒரு பைசாகூட வேண்டாம். நீங்கள் சம்மதித்தால் போதும்” எனச் சொல்லி இருக்கிறார். “உண்மையாவே கேட்குறீங்களா?” என அந்தப் பெண் நெகிழ்ந்து கலங்க, இனிதே நடந்தேறி இருக்கிறது திருமணம்.
‘படத்தில் வேண்டுமானால் நீங்கள் காமெடியனாக இருக்கலாம். நிஜத்தில் நீங்கள்தான் அண்ணன் ஹீரோ…’ என சரவணனை அப்படியே கட்டிக் கொண்டேன். அவருக்கு முத்தம் கொடுக்காத குறை மட்டும்தான். அந்தளவுக்கு நெகிழ்ந்து கலங்கி சிலிர்த்துப் போனேன். இன்று காதல் சரவணனுக்கும் அந்தப் பேரன்பு தங்கைக்கும் 14-வது திருமண நாள். சர்க்கரைக் கட்டிகளாக இரு குழந்தைகள்…பேரன்பின் நதியாய் பெருகி ஓடுகிற வாழ்வுக்கு என் தாழ்மையான வணக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/09/11-20-2025-12-09-18-27-48.jpg)