இயக்குநர் ஏ எல் விஜய் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ என்ற படம் மூலம் ஒரு முக்கோண காதல் கதையை கையில் எடுத்து வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சி செய்திருக்கிறார். இவரது முயற்சி கை கொடுத்ததா, இல்லையா?
நாயகன் மதும் கேஸ், நாயகி ஜியா ஷங்கரை சிறுவயதில் இருந்து இதயம் முரளி போல் ஒன் சைடாக காதலிக்கிறார். அவருக்காக பல்வேறு வேலைகளை செய்து நிழல் போல் கூடவே இருந்து அவரை காக்கிறார். மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக காதலிக்கும் அவர் நாயகி ஜியாவுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார். இதற்கிடையே இப்படி ஒருவர் தன்னை காதலிப்பதே தெரியாமல் இருக்கும் ஜியா சங்கர் அவர் மியூசிக் குழுவில் கம்போசராக இருக்கும் அர்ஜுனை காதலிக்கிறார். அர்ஜுனும் இவரை காதலிக்கிறார். இருவரும் ஸ்காட்லாண்டுக்கு சென்று அங்கு ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதை தங்கள் இலக்காக வைத்திருக்கின்றனர். அந்த நேரத்தில் தந்தை ஜெயபிரகாஷ் நாயகிக்கு மாப்பிள்ளை பார்க்க அதை பிடிக்காத ஜியா ஷங்கர் ஸ்காட்லாண்டுக்கு தன் காதலனுடன் சென்று விடுகிறார். கூடவே ஒரு தலை காதலரான மதும் கேஸும் சென்று விடுகிறார்.
சென்ற இடத்தில் ஜியா ஷங்கருக்கு தன் காதலன் தன்னை ஏமாற்றி இருப்பது தெரியவர அவர் தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். அதில் அவருக்கு விபத்து ஏற்பட அதன் பாதிப்பாக ஒரு வித்தியாசமான மறதி வியாதி ஏற்படுகிறது. இதனால் அவர் சமீபத்தில் நடந்த விஷயங்களை மறந்து விடுகிறார். அந்த விபத்திலிருந்து அவரைக் காப்பாற்றிய மதும் கேஸ், தான்தான் ஜியா வின் காதலன் என கூற ஜியாவும் நம்பி விடுகிறார். அதே போல் அர்ஜுனும் தான்தான் காதலர் எனக் கூற இருவருக்குள்ளும் ஒருவித கேட் அன் மௌஸ் கேம் ஆரம்பிக்கிறது. இதில் யார் வெற்றி பெற்றார்கள்? நாயகிக்கு நினைவு திரும்பியதா, இல்லையா? நாயகனின் ஒரு தலை காதல் ஜெயித்ததா? அல்லது அர்ஜுனின் போலி காதல் ஜெயித்ததா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு முக்கோண காதல் கதையை கையில் எடுத்துள்ள இயக்குநர் ஏ எல் விஜய் வழக்கம் போல் தான் எடுக்கும் சமீபத்திய படங்களின் திரைக்கதை அமைப்பை போல் இந்த படத்தையும் எடுத்து ஒரு சுமாரான காதல் படமாகவே கொடுத்திருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் நம் வாழ்வியலில் ஒட்டாத ஒரு கதையம்சத்தை கையில் எடுத்துள்ள அவர் அதனுடைய காட்சி அமைப்புகளையும் மிகவும் தள்ளி நின்று பார்க்கும் படியாகவே அமைத்திருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் எதார்த்தம் இல்லை. அதேபோல் பல இடங்களில் லாஜிக் மீறல்களும் தென்படுகிறது. இப்படியான பல மைனஸ்கள் இடையே இவரின் நேர்த்தியான காட்சி அமைப்புகள் சிறப்பான மேக்கிங் ஆகியவைகள் மட்டும் வழக்கம் போல் சிறப்பாக அமைந்து படத்தை ரசிக்கும்படியாக்குகிறது.
இந்தக்கால இளைஞர்களை கவறும் வகையில் வித்தியாசமான காதல் கதையாக உருவாக்க நினைத்த இயக்குநர் அதை இன்னமும் கூட ஆராய்ச்சி செய்து இக்காள ரசிகர்களுக்கு எந்த வகையில் பிடிக்குமோ அதுபோல் திரைக்கதை அமைத்து படத்தை கொடுத்திருந்தால் இந்த படம் சிறப்பாக அமைந்திருக்கும். வழக்கமாக தான் எடுக்கும் படங்களை சிறப்பான முறையில் கையாண்டு டெக்னிக்கலாகவும் சிறப்பான முறையில் எடுக்கும் விஜய் திரைக்கதையில் ஏனோ சற்றே தடுமாறுகிறார். அதையே இந்த படத்திலும் செய்து இருப்பது பாதகமாக அமைந்திருக்கிறது.
தன் ஆரம்பகால படங்களான கிரீடம், மதராசபட்டினம், தாண்டவம், தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களை சிறப்பாகவும் மக்கள் வாழ்வியலுக்கு மிகவும் நெருக்கமான படமாகவும் கொடுத்து வரவேற்பை பெற்ற இயக்குநர் ஏ எல் விஜய், ஏனோ சில பல ஆண்டுகளாகவே சற்று தடுமாறி வருகிறார். ரசிகர்களும் இவர் பழைய பாதைக்கு திரும்பி விடுவார் என நினைத்து திரையரங்குக்கு வந்து ஏமாற்றத்துடனே திரும்புகின்றனர். மீண்டும் மீண்டும் அந்த வகை திரைப்படங்களையே கொடுக்கும் அவர் இன்னமும் கூட திரைக்கதைக்கு முக்கியத்துவம் அளித்து நிதானமான முறையில் ஒரு கதையை உருவாக்கி அதன் பின் படத்தை உருவாக்கி கொடுக்கும் பட்சத்தில் அந்த படம் சிறப்பான படமாகவே அமைய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி ஒரு முயற்சிக்கு தான் ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
இந்தப் படத்தை பொறுத்தவரை படம் ஆரம்பித்து கலகலப்பான காட்சி அமைப்புகள் மூலம் நகரம் திரைப்படம் போகப் போக அதுவே நமக்கு அயற்சி கொடுத்திருக்கிறது. அதன் பின் காதல் காட்சிகளுக்குள் செல்லும் திரைப்படம் சில இடங்களில் மட்டும் அழுத்தமான காதல் காட்சிகளாக நகர்ந்து போக போக இரண்டாம் பாதியில் இருந்து மீண்டும் கலகலப்பான படமாக நகர முயற்சி செய்து இறுதி கட்டத்தில் அழுத்தமான ஃபீல் குட் படமாக மாற முயற்சி செய்கிறது. இரண்டாம் பாதியில் இருந்த ஓரளவு விறுவிறுப்பான அம்சங்கள் முதல் பாதியிலும் கொடுத்திருந்தால் இன்னமும் நிறைவாக இருந்திருக்கும்.
நாயகன் மதும் கேஸுக்கு அதிக வசனங்கள் இல்லை. முகபாவனைகளிலேயே படம் முழுவதும் வருகிறார். அப்படியே பயணித்துவிட்டு செல்கிறார். நாயகி ஜியா ஷங்கர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அழகாக இருக்கிறார். நிறைவாக நடித்திருக்கிறார் எந்தெந்த இடங்களுக்கு எவ்வளவு அழகு தேவையோ அதை அழகாக காண்பித்திருக்கிறார். மற்றொரு நாயகன் அர்ஜுன் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். பல இடங்களில் சிரிக்கவும் வைத்து சில இடங்களில் எரிச்சலும் ஊட்டி ரசிக்க வைத்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் எம்எஸ் பாஸ்கர் வழக்கம் போல் தனது அனுபவம் வாய்ந்த நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து கதையுடன் நம்மை பயணிக்க வைக்கிறார். இவரின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பலம். அப்பாவாக வரும் ஜெயபிரகாஷ் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து விட்டு சென்றிருக்கிறார். மற்றபடி படத்தில் நடித்த மற்ற அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்க்க முயற்சி செய்திருக்கின்றனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ் அதுவும் இசை சம்பந்தப்பட்ட படம் என்று உடனேயே இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் தவிடு பொடியாக்கி மிகவும் சுமாரான பாடல்களை மட்டும் கொடுத்து மிகவும் டிஸப்பாயிண்ட்மெண்ட் செய்திருக்கிறார். அதுவும் குறிப்பாக பழைய இளையராஜா பாடலை உல்டா செய்து படத்தில் பயன்படுத்தி இருப்பது ஓரளவு ஓகே. மற்றபடி படத்தில் ஒரே ஒரு ஆறுதலாக பின்னணி இசை மட்டும் சுமாராக கொடுத்திருக்கிறார். சீக்கிரம் கம் பேக் கொடுங்க ஹாரிஸ்... வி ஆர் வெயிட்டிங்! அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் ஸ்காட்லாந்து சம்பந்தப்பட்ட காட்சிகளும் காதல் காட்சிகளும் சிறப்பான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கம்போல் ஏ எல் விஜய் படங்கள் என்றாலே காட்சியமைப்புகள் சிறப்பாக இருக்கும் அதையுமே இந்த படத்திலும் தொடர்வது மிக சிறப்பு.
படத்தின் தயாரிப்பாளரின் மகன் நாயகன் என்பதால் அவரை எப்படியாவது நாயகன் ஆக்கிவிட வேண்டும் என உருவாக்கி இருக்கும் இந்த கதையை இன்னமும் கூட ஒரு அழுத்தம் நிறைந்த அழகான காதல் கதையாக உருவாக்கி அதற்கு நல்ல திரைக்கதை அமைந்திருந்தால் இந்த படம் சிறப்பான படமாக அமைந்திருக்கும். ஆனால் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய முக்கோண காதல் கதையை கையில் எடுத்த இயக்குநர் அதில் ஞாபகம் மறதி விஷயங்களை வைத்து மிகவும் அறத பழசான திரைக்கதை அமைத்து பல இடங்களில் எரிச்சலை உண்டாக்கி அதே சமயம் அழுத்தம் இல்லாத காட்சிகளால் அயற்சியையும் கொடுத்து இது ஏ எல் விஜய் படமா என சந்தேகம் ஏற்படும்படி அளவிற்கு சென்றுள்ளது. இது சற்று ஏமாற்றம்.
காதல் ரீசெட் ரிப்பீட் - டோன்ட் ரிப்பீட் மிஸ்டர் விஜய்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/07/371-2026-03-07-18-47-47.jpg)