சமீப காலங்களாக துல்கர் சல்மான் நடித்து வரும் படங்கள் பான் இந்திய படங்களாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைக்க தவறவில்லை. அந்த அளவு நேர்த்தியான மற்றும் ரசிக்கத்தக்க திரைப்படங்கள் மூலம் அனைவரையும் ரசிக்க வைத்து கொண்டிருக்கும் துல்கர் சல்மான் அடுத்ததாக காந்தா திரைப்படம் மூலம் கோதாவில் குதித்து இருக்கிறார். இந்த முறை இவரின் முந்தைய படங்கள் பெற்ற வரவேற்பை இந்த காந்தா திரைப்படமும் பெற்றதா, இல்லையா1950 களில் யாரும் இல்லாத அனாதையாக இருந்த துல்கர் சல்மானை தன் மகன் போல் மற்றும் சிஷ்யன் போல் பாவித்து அவருக்கு சகல வித்தைகளையும் கற்றுக் கொடுத்து சினிமாவில் மிகப்பெரும் நடிகராக அவரை உருவாக்குகிறார் கதாசிரியர் மற்றும் இயக்குநர் சமுத்திரக்கனி. இவர்கள் இருவருக்கும் காலப்போக்கில் ஈகோ மோதல் ஏற்படுகிறது. அந்த சமயம் இவர்கள் இருவரும் இணைந்து காந்தா என்ற திரைப்படத்தை உருவாக்க கைகோர்க்கின்றனர். படப்பிடிப்பு ஆரம்பித்து ஒருவருக்கொருவர் ஈகோ மோதலால் காட்சிகளை மாற்றி மாற்றி படம் பிடிக்கின்றனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை வெடிக்கிறது. இவர்களுக்கிடையே நாயகி பாக்கியஸ்ரீ சிக்கி தவிக்கிறார். நாளுக்கு நாள் ஈகோ மோதல் பெருமளவு வெடிக்க இதற்கிடையே நாயகி பாக்கியஸ்ரீக்கும் ஏற்கனவே திருமணம் ஆன துல்கருக்கும் காதல் ஏற்படுகிறது. இது சமுத்திரக்கனிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இருந்தும் இவர்கள் காதல் பல தடைகளை கடந்து வளர ஆரம்பிக்கும் நேரத்தில், நாயகி பாக்கியஸ்ரீ மர்மமான ஒரு நபரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த கொலையை துப்பு துலக்க போலீஸ் ஆபிசர் ராணா படப்பிடிப்பு தளத்திற்கு விரைகிறார். வந்த இடத்தில் அதிரடி விசாரணைகள் நடத்துகிறார். இதைத்தொடர்ந்து பாக்கியஸ்ரீயை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி சிக்கினாரா, இல்லையா? என்பதே காந்தா படத்தின் மீதி கதை.
1950 களில் ஒரு செட்டுக்குள்ளேயே நடக்கும் படப்பிடிப்பு தளத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து அதனுள் நடக்கும் ட்ராமாவை மிக அழகாக காட்சிப்படுத்தி விறுவிறுப்பான திரைக்கதை மூலம் பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் செல்வமணி செல்வராஜ். இவரது நேர்த்தியான மற்றும் பரபரப்பான திரைக்கதை மூலம் பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கு வர வைத்து ஒரு மர்டர் மிஸ்டரி திரில்லர் படம் பார்த்த உணர்வை அதுவும் குறிப்பாக அந்த காலம் போல் பிளாக் அண்ட் ஒயிட் படமாக சில காட்சிகளை கொடுத்து ரெட்ரோ மோடுக்கு நம்மை அழைத்துச் சென்று ரசிக்க வைத்திருக்கிறார். முதல் பாதி முழுவதும் படத்தின் மேக்கிங் காண்பிப்பது போல் காட்சிகளை அமைத்து சற்றே அயர்ச்சி ஏற்படும்படி இருந்தாலும் இரண்டாம் பாதி இன்வெஸ்டிகேஷன் காட்சிகள் ஆரம்பித்ததற்குப் பிறகு படம் ஜெட் வேகத்தில் பல்வேறு திரும்ப முனைகளுக்கு இடையே விறுவிறுப்பாக நகர்ந்து ஒரு சிறப்பான தரமான மர்டர் மிஸ்டரி திரில்லர் படம் பார்த்த உணர்வை இந்த காந்தா கொடுத்திருக்கிறது. குறிப்பாக முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியை மிக மிக விறுவிறுப்பாக அமைந்து மொத்த படத்தையும் காப்பாற்றி படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது. படத்தின் கதை கரு ஸ்டேஜிங்கை முதல் பாதி முழுவதும் எடுத்துக் கொண்ட இயக்குனர் இரண்டாம் பாதியில் அதற்கான தீர்வுகளை சிறப்பான முறையில் கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் கூறி மீண்டும் ஒரு வெற்றி படத்தை துல்கர் சினிமா கரியரில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் செல்வமணி செல்வராஜ்.
நாயகி பாக்கியஸ்ரீ ஆரம்ப கட்டத்தில் சற்று நடிப்பில் ஸ்லோவாக ஆரம்பித்தாலும் போகப் போக பிக்கப் செய்து சிறப்பான முறையில் நடித்து கடைசி கட்டத்தில் பார்ப்பவரை கலங்கடிக்க செய்திருக்கிறார். துல்கரின் மனைவியாக வரும் காயத்ரி அளவாக நடித்த கவனம் பெற்று இருக்கிறார். இவரது தந்தையாக வரும் நிழல்கள் ரவி அனுபவ நடிப்பில் மின்னுகிறார். நாயகி நண்பராக வரும் தமிழ்ச்செல்வி சிறப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி உடனடித்த அனைவருக்கும் அவரவர் வேலையை மிகச் சிறப்பாக செய்துவிட்டு சென்றிருக்கின்றனர்.
படத்தின் இன்னொரு இரவாக பார்க்கப்படுவது கலை இயக்கம். அதை சிறப்பான முறையில் செய்து நம்மை அந்த காலகட்டத்திற்கு கூட்டி சென்று இருக்கிறார் கலை இயக்குனர் தா இராமலிங்கம். பா ரஞ்சித் படங்கள் மூலம் பிரபலமான இவர் சிறப்பான முறையில் கலை இயக்கம் செய்து அந்த காலத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார். டேனி சஞ்சஸ் லோபஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் உலகத்தரம். இவரது நேர்த்தியான ஒளிப்பதிவின் மூலம் அந்த கால ஹாலிவுட் படங்களை பார்த்த உணர்வு இப்படத்தில் கிடைத்திருக்கிறது. அதே சமயம் பிளாக் அண்ட் ஒயிட் காட்சிகளையும் சிறப்பாக காட்சிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். ஜானு சங்கர் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு காட்சி கேட்டார் போல் சிறப்பான பின்னணி இசை கொடுத்து படத்தையும் தூக்கி நிறுத்தி இருக்கிறார்.
முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதியில் மிக மிக சிறப்பாக காட்சி அமைப்புகளை உருவாக்கி விறுவிறுப்பாகவும் திருப்புமுனைகளோடு படத்தை நகர்த்தியை இயக்குனர் அதை முதல் பாதியிலும் சற்று கவனமாக செய்திருந்தால் இந்த படம் இன்னும் மிக மிக சிறப்பாக அமைந்திருக்கும். மற்றபடி ஒரு படமாக பார்க்கும் பட்சத்தில் சினிமா படப்பிடிப்பு பின்னணியில் ஒரு நல்ல மர்டர் மிஸ்டரி திரில்லர் படமாக இதை அமைந்திருக்கிறது.
காந்தா - பாவப்பட்டவள்!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/16/k2-2025-11-16-16-26-45.jpg)