பிரபல தெலுங்கு நடிகர் ஜுனியர் என்.டி.ஆர், கடைசியாக இந்தியில் ஹிரித்திக் ரோஷனுடன் ‘வார் 2’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். ‘டிராகன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒரு மருத்துவமனை வளாக திறப்பு விழாவிற்கு ஜூனிய என்.டி.ஆர். சென்றிருந்தார். இதனால் இவரைக் காண ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்திருந்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட அதன் பாதிப்பாக மருத்துவமனை உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்ற சூழ்நிலை உருவாக அவர்களை காவல் துறையினர் லேசாக தடியடி நடத்தி சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனிடையே நிகழ்ச்சியின் பேசிய ஜூனியர் என்.டி.ஆர், “சாலை விபத்துகள் தனது குடும்பத்தை மிகவும் பாதித்திருக்கிறது. எனது தந்தையையும் மூத்த சகோதரரும் சாலை விபத்தில் தான் உயிரிழந்தார்கள். இந்த துயர சம்பவங்கள், எனது வாழ்க்கையை மாற்றியது. சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. நானும் ஒரு சாலை விபத்தில் பலத்த காயமடைந்திருக்கிறேன். அதனால் வாகனம் ஓட்டும்போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். போக்குவரத்து விதிகளைப் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும். எப்போதும் தங்கள் குடும்பத்தினரை நினைவில் கொள்ள வேண்டும்” என்றார். தொடர்ந்து பெண்கள் மதிப்பு குறித்தும் வாழ்க்கையின் வெற்றி குறித்தும் பேசியிருந்தார்.
அவர் பேசிக்கொண்டிருக்கையில், அரங்கில் இருந்த ரசிகர்கள் தொடர்ந்து கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். இதனால் கடுப்பான ஜூனிய, என்.டி.ஆர், “கொஞ்சம் அமைதியாக இருக்க முடியுமா?” என தெலுங்கில் கூறிவிட்டு பின்பு ஆங்கிலத்தில், “நான் அமைதியாக இருக்க சொன்னேன்” என சொன்னார். உடனடியாக ரசிகர்கள் அமைதியாகினர். பின்பு அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Follow Us