பிரபல சமையல் நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் கடந்த ஜூலையில் இணையத்தில் வைரலானது. இதனை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும் நான் 6 மாதம் கர்பமாக இருப்பதாகவும் அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் அடுத்த மாதமே மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக மகளிர் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக ஜாய் சிரிசில்டாவிடமும் மாதம்பட்டி ரங்கராஜிடமும் விசாரணை நடைபெற்றது.
இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஜாய் கிரிசில்டாவும் ஜாய் சிரிசில்டாவிற்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதனிடையே ஜாய் கிரிசில்டாவிற்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மகளிர் ஆணையம், காவல்துறை ஆணையருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கும் ஒரு பரிந்துரை கடிதம் அனுப்பியது. அதில் மாதம்பட்டி ரங்கராஜிடம் நடந்த விசாரணையில் அவர் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்தது உண்மைதான் எனவும் அவரது குழந்தைக்கு தான் தான் தந்தை எனவும் ஒப்புக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் மாதம்பட்டி ரங்கராஜ் குழந்தைக்கு தந்தை என ஒப்புக் கொண்டுள்ளதால் டிஎன்ஏ டெஸ்ட் தேவையில்லை எனக் கூறிய மகளிர் ஆணையம் வழக்கு முடியும் வரை குழந்தைக்கான பராமரிப்பு செலவுகளை மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. தொடர்ந்து வழக்கு தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை என மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கமளித்தார். மேலும் பல முறை மிரட்டியதால் தான் இந்த கல்யாணம் நடைபெற்றது எனவும் பணம் பறிக்கும் நோக்கில் இக்கல்யாணம் நடைபெற்றது என்றும் கூறியிருந்தார். அதோடு டிஎன்ஏ டெஸ்ட் மூலம் குழந்தை தன்னுடையது என நிரூபிக்கப்பட்டால் அக்குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்ள தயாராகவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜாய் சிரிசில்டா மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கத்துக்கு பதிலளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவர் சொல்வது அனைத்தும் முழுக்க முழுக்க தவறானது. விசாரணையில் ஒன்று பேசிவிட்டு வெளியே ஒன்று சொல்கிறார். ஒரு அரசு அதிகாரியையே கேள்வி கேட்கிறார். பணபலம் படைத்ததால் இந்த கேள்வியை அவர் கேட்கிறாரா?
விசாரணை அறையில் அவர் சொன்னதை நான் இங்கே சொல்கிறேன். ‘ஜாய் மாதிரி என்னை யாரும் பார்த்துக் கொள்ள முடியாது. அவ்ளோ நல்லா பாத்துக்கிட்டாங்க’ இப்படின்னு என்னை பற்றி புகழ்ந்து பேசினார். கல்யாணம் பண்ணினதையும் ஒத்துக் கொண்டார். நான் அந்த அதிகாரியிடம் கோயம்புத்தூர் பகுதியில் அவரது குடும்பத்தினர் இந்த குழந்தை அவருடையது இல்லை என வதந்தி பரப்புகிறார்கள், அதனால் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கேட்டேன். டிஎன்ஏ டெஸ்டுக்கு நான் தயராக இருப்பதாகவும் சொன்னேன். உடனே மாதம்பட்டி ரங்கராஜ் டிஎன்ஏ டெஸ்ட் தேவை இல்லை, அது என்னுடைய குழந்தை தான் என ஒப்புக்கொண்டார். அந்த அறைக்குள் அரசு அதிகாரியிடம் ஒப்புக்கொண்டதை வெளியில் வேறு மாதிரி மாற்றி சொல்வதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அவருடைய குழந்தையை அவரே கொச்சைப்படுத்தி ஒரு அறிக்கை வெளியிடுகிறார். மிரட்டி கல்யாணம் செய்வதற்கு அவர் என்ன சின்ன குழந்தையா” எனப் பேசினார். தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் அனுப்பிய மெசேஜ்களையும் அவர் காண்பித்து, இது போன்ற பல மெசேஜ்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார்.
Follow Us