ஜீவா கடைசியாக பா.விஜய் இயக்கத்தில் ‘அகத்தியா’ படத்தில் நடித்திருந்தார். இப்போது ‘தலைவர் தம்பி தலைமையில்’ என்ற பெயரில் ஒரு படம் நடித்துள்ளார். இதைத் தவிர்த்து ‘பிளாக்’ பட இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் ஒரு படம் மற்றும் சிவா மனசுல சக்தி பட இயக்குநர் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தை நிதிஷ் சஹதேவ் இயக்குகிறார். கண்ணன் ரவி தயாரிக்கும் நிலையில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் என்பவர் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 1ஆம் தேதி வெளியானது.
ட்ரெய்லரில் அரசியல்வாதியாக வரும் ஜீவா ஒரு கல்யாணத்துக்கு செல்கிறார். அங்கு எல்லா பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு வேலை செய்வதாக சொல்லி செய்து வருகிறார். ஆனால் கல்யாணத்தில் ஒரு பிரச்சனை வெடிக்க அதை சரி செய்யப்பட்டதா இல்லையா என்ற கேள்வியுடன் ட்ரெய்லர் முடிகிறது. மேலும் ஜீவாவிற்கும் பிரச்சனைக்கும் சம்பந்தம் இருக்கா, முதலில் என்ன பிரச்சனை என அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக காமெடி கலந்து கலகலப்பான திரைப்படமாகச் சொல்லியிருப்பதாக தெரிகிறது. இடையில் பிரச்சனை வெடித்ததும் ‘படிச்சு படிச்சு சொன்னனேடா, கண்டிஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடா பண்ணுங்கடான்னு... கேட்டீங்களா’ என்ற வசனமும் இடம்பெறுகிறது.