ஜீவா நடிப்பில் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தலைவர் தம்பி தலைமையில்’. கண்ணன் ரவி தயாரித்துள்ள இப்படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷ்ணு விஜய் என்பவர் இசையமைத்துள்ளார். ஒரு திருமணத்தின் பின்னணியில் காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக இப்படம் உருவாகியுள்ளது.
பொங்கல் வெளியீடாக கடந்த 15ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக கூடுதல் திரையரங்கும் ஒதுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடைய படக்குழு பல்வேறு ஊர்களில் தியேட்டர் விசிட் அடித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு ஊரில் தியேட்டர் விசிட் முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த படக்குழு பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தனர். அப்போது ஜீவாவிடம் படத்தில் இடம்பெற்ற வசனம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதாவது படத்தில் கரூர் துயர சம்பவத்தின் போது அமைச்சர் அன்பில் மகேஷ் அழுது கொண்டு பேசிய, ‘படிச்சு படிச்சு சொன்னனேடா, கண்டிஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடா பண்ணுங்கடான்னு... கேட்டீங்களா’ வசனம் இடம் பெற்றது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் அதே சமயம் விமர்சனத்தையும் எதிர்கொண்டது.
இதற்கு பதிலளித்த ஜீவா, “ட்ரெண்டிங் என்று விஷயத்துக்கு ஏற்றது போலத் தான் எல்லாமே செய்து வருகிறோம். டைரக்டர் தான் அந்த இடத்தில் அந்த வசனத்தை வைத்தால் நல்லா இருக்கும் என சொன்னார். நானும் அதை வெகுளியாக பேசி விட்டேன். அதற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பும் கிடைத்தது. மற்றபடி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக எடுக்கப்பட்டது” என்றார்.
Follow Us