விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷனை வைத்து ‘சிக்மா’ எனும் தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படத்தை லைகா மற்றும் ஜேசன் சஞ்சை இருவரும் தயாரிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகிறது.
படத்தின் அறிவிப்பு 2023ஆம் ஆண்டு வெளியானது. பின்பு கடந்த ஆண்டு மோஷன் போஸ்டர் வெளியானது. மோஷன் போஸ்டரில், ‘தடைசெய்யப்பட்ட ரகசியம்’(Forbidden Secret) என்ற புத்தகம் இடம்பெற்றிருந்தது. அதனால் இதுவரை சொல்லப்படாத கதையை இப்படம் சொல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து சந்தீப் கிஷன் பிறந்தநாளுக்கும் ஜேசன் சஞ்சய் பிறந்தநாளுக்கும் வாழ்த்து வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதில் படப்பிடிப்பின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
பின்பு படத்தின் டைட்டில் லுக் வெளியாகியிருந்தது. தொடர்ந்து கடந்த 19ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதோடு பட டீசர் இன்று வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் ஆரம்பத்தில் ‘நிலம்... நீர்... காற்று... முக்கியமா பணம்... எல்லாத்துக்கும் நாளுக்கு நாள் மதிப்பு ஏறிக்கிட்டேதான் போது, ஆனா நம்ம யாருன்னு என்பதுக்கோ... நம்ம உறவுகளுக்கோ எந்த மதிப்பும் இல்ல’ என்று சந்தீப் கிஷன் பேசும் வசனத்துடன் தொடங்குகிறது. பின்பு அவர் பணத்தை கொள்ளையடிப்பது போலவும் அதற்காக புத்திசாலித்தனமாக திட்டமிடுவது போலவும் காட்சிகள் இடம்பெறுகிறது.
அதிகம் ஆக்ஷன் காட்சிகளும் துப்பாக்கி சுடும் காட்சிகளும் வருகிறது. இதனால் இது ஒரு மிகுந்த ஆக்ஷன் நிறைந்த ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் பட டீசர் வெளியாகியுள்ளது. முன்னதாக படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து அறிவிக்கவில்லை. ஆனால் இந்த டீசர் மூலம் யார் யார் நடிக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபீ, மகாலகட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us