சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையை விரிவுபடுத்த திருவான்மியூர் முதல் அக்கரை வரை சாலையோரங்களில் இருக்கும் நிலங்களை மாநில நெடுஞ்சாலைத் துறை கையகப்படுத்தியது. அதில் தவறு நடந்திருப்பதாக சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த சிவகாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

Advertisment

அவர் செய்த மனுவில், “குறிப்பிட்ட அந்த 1,420 சதுர அடி நிலம் தனது தாத்தாவிற்குச் சொந்தமானது. அதை கையகப்படுத்தியதற்கான இழப்பீடு தொகையான ரூ.1.87 கோடியை எங்கள் குடும்பத்திற்கு வழங்காமல் எந்த வகையிலும் தொடர்பு இல்லாத மறைந்த நடிகை ஶ்ரீதேவி குடும்பத்தாரான அவரது கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமானது. 

Advertisment

அதனால் அந்த இழப்பீடு தொகையைத் திருப்பி வசூலித்து எங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி புகார் அளித்தேன். அதை பரிசீலிக்கத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர், மனுதாரரின் கோரிக்கையை 4 வாரங்களில் பரிசீலிக்கத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.