தமிழ்த் திரையில் உச்ச நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது ஜனநாயகன் படம் வருகின்ற 9ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இப்படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில், அவர் நடிக்கும் கடைசிப் படம் என்பதால் “ஜனநாயகன்” முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்களும் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தப் பாடல்கள் வெளியானது முதல் அரசியல் வட்டாரத்திலும் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. பாடல்களில் அரசியல் குறித்தான வரிகளும் இடம்பெற்றிருந்ததே அதற்கு காரணம். அது மட்டுமல்லாமல், பாடல்கள் வெளியான சில நிமிடங்களிலேயே அதிகபட்ச பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தன.

Advertisment

ரிலீஸுக்கும் இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் தணிக்கைச் சான்று கிடைக்கவில்லை. இதனால் படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம், பட வெளியீடான 9ஆம் தேதி காலை தீர்ப்பு வழங்கவுள்ளது. இதனால் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற சந்தேகம் வலு பெற பல இடங்களில் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இதில் பெரும்பாலான இடங்களில் ஆயிரக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில் கோவில்பட்டியில் சத்யபாமா, சண்முகா, லட்சுமி ஆகிய மூன்று திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.1000 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவரிடம் ரசிகர் ஒருவர் பேசும் ஆடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த ஆடியோவில், ரசிகர் மன்ற நிர்வாகி 600, 800, 1000 ரூபாய் என ஒவ்வொரு தியேட்டருக்கும் ஒரு கட்டணம் என்று பட்டியலிடுகிறார்.

Advertisment

இந்த நிலையில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட அதிகக் கட்டணம் வசூல் செய்வதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் பாலுவிடம் புகார் மனு கொடுத்துள்ளனர். விசாரித்து ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்தச் சம்பவம் கோவில்பட்டியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இதே போன்றதா நடப்பதாக ரசிகர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். விஜயின் கடைசிப் படம் என்பதால், இதனைப் பயன்படுத்திக்கொண்டு ஆங்காங்கே வசூல் வேட்டை நடத்தப்படுவது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.