விஜய் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெங்கட் நாராயண தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜன நாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் , நரேன், கௌதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜூ உள்ளிட பல பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. விஜய்யின் முழு நேர அரசியலுக்கு முன் கடைசிப் படமாக இப்படம் இருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தை காண இருக்கின்றனர்.
முன்னதாக டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்தது. பின்பு விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி படத்தின் கிளிம்ஸ் மற்றும் இரண்டு போஸ்டர்கள் வெளியானது. கிளிம்ஸில் விஜய் போலீஸ் அதிகாரியாக கையில் கத்தியுடன் நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. படத்தின் முதல் பாடலான ‘தளபதி கச்சேரி’ கடந்த மாதம் வெளியாகியிருந்தது.
படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27 ஆம் தேதி மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. இதில் ஆண்ட்ரியா, அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பாடகர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதனிடையே படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகவுள்ளதாக அண்மையில் அப்டேட் வெளியானது. இந்த நிலையில் தற்போது அப்பாடலுக்காக ஒரு ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலின் பெயர் ‘ஒரு பேரே வரலாறு’ என்றும் நாளை மாலை 6:30 மணிக்கு பாடல் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. அந்த புரோமோவில், ‘ஒரு பேரே வரலாறு... அழிச்சாலும் அழியாது... அவன் தானே ஜனநாயகன். நம்ம மக்கள் நினைக்காம ஒரு மாற்றம் பொறக்காதே... தல வந்தால் தரமானவன்” என்ற வரிகள் பின்னணியில் ஒலிக்க ஒரு பெருக் கூட்டம் விஜயை ஆதரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுவருகிறது.
Follow Us