விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகவிருந்த இப்படம் தள்ளிப் போனது. இப்படத்தில் மத உணர்வுகள் தூண்டும் வகையில் காட்சிகள் இருப்பதாக தணிக்கை குழுவுக்கு புகார் வந்ததாலும், பாதுகாப்பு படைகளின் சின்னம் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாலும் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக தணிக்கை வாரியம் வாதிட்டது.

Advertisment

இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி பி.டி.ஆஷா கடந்த 7ஆம் தேதி, ஜன நாயகன் படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, தனிநீதிபதி ஆஷா பிறப்பித்த யு/ஏ சான்றிதழ் வழங்க கோரிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

Advertisment

அதனால், படத் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடு மனு மீது விசாரணை உச்ச நீதிமன்றத்துக்கு வந்த போது, இந்த வழக்கை விசாரிக்க விருப்பமில்லை என்றும் உயர்நீதிமன்றத்தையே அணுகுங்கள் என்றும் உச்ச தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. பின்பு மீண்டும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு விசாரனைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் சார்பிலும், படத் தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில் ஜன நாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கோரிய வழக்கில் இன்று (27-01-26) தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அமர்வு தீர்ப்பு அளித்தது. அதில் நீதிபதிகள் கூறியதாவது, “ஜன நாயகன் தணிக்கை வழக்கில் உரிய விளக்கம் அளிக்க தணிக்கை வாரியத்திற்கு அவகாசம் வழங்கவில்லை. படத்தில் சில காட்சிகள் சமூகத்தில் பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இப்படத்தை தணிக்கை வாரியத் தலைவர் மறு ஆய்வு செய்வது அவசியமானது” என்று கூறி தணிக்கை வாரியத்தின் முடிவை உறுதி செய்து தீர்ப்பளித்தனர். மேலும், ஜன நாயகன் படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப உத்தரவிட்டு, மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பாமல் சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டும் என தனி நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர்.

Advertisment

மேலும், இந்த வழக்கை தனி நீதிபதி பி.டி.ஆஷாவுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டனர். இது குறித்து நீதிபதிகள் தெரிவித்ததாவது, “தணிக்கை வாரியத்திடம் விளக்கம் பெறாமல் தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எனவே, இந்த வழக்கை மீண்டும் விசாரித்து புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று ஆணை பிறப்பித்துள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் ஜன நாயகன் படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் தனி நீதிபதி பி.டி.ஆஷா முன்பு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. எனவே, இப்படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.