தமிழ்த்திரையில் உச்ச நடிகராக இருந்து வருபவர் விஜய். இவரது ஜனநாயகன் படம் வருகின்ற 9ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இப்படம் விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. விஜய் அரசியலுக்கு வந்து விட்ட நிலையில், அவர் நடிக்கும் கடைசிப் படம் இது என்று கூறப்பட்டதையடுத்து "ஜனநாயகன்" முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடல்கள் வெளியானது முதல் அரசியல் வட்டாரத்திலும் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. காரணம் பாடலின் சில வரிகளில் அரசியல் குறித்தான வரிகளும் இடம் பெற்றது தான். அது மட்டுமல்லாமல் பாடல்கள் வெளியான சில நிமிடங்களிலேயே அதிகபட்ச பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் "ஜனநாயகன்" படம் தற்போது சிக்கலில் இருப்பதாக தெரிகிறது.
படத்தை வெளியிடுவதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து விட்ட நிலையில், தற்போது வரை அப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகின்றன. அதனால் படம் வருகின்ற வெள்ளிக்கிழமை திரைக்கு வருமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. படம் நிச்சயமாக வெளியாகி விடும் என்ற நம்பிக்கையில் முதல்நாள் காட்சிக்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் இன்றுவரை தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தணிக்கை வழங்குவது தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் அதன் விசாரணை நாளைக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.
Follow Us