Advertisment

‘ஜன நாயகன்’ சென்சார் வழக்கு; நீதிமன்ற தீர்ப்பின் விவரம்

463

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (09.01.2026) வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த 6ஆம் தேதி காலை அவசர வழக்கு தொடுத்தது. பின்பு அன்றைய தினம் பிற்பகலிலே நீதிபதி ஆஷா தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

Advertisment

அப்போது தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் மத உணர்வுகள் தூண்டும் வகையில் ஒரு காட்சி இருப்பதாக தணிக்கை குழுவுக்கு புகார் வந்திருப்பதாகவும் அதன் காரணமாகவே மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்பு படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘யாரோ ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சான்றிதழ் அளிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என்ற சட்டப்பிரிவு, தணிக்கை வாரிய சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 

Advertisment

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, யார் புகார் கொடுத்தார் என்பதை தாக்கல் செய்ய தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டு அடுத்த நாளான 7ஆம் தேதி விசாரணையை ஒத்தி வைத்தார். அதன்படி, அடுத்த நாள் விசாரணையில் தணிக்கை வாரியம் சார்பில் யார் புகார் கொடுத்தார் என்ற விவரம் தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி, யு/ஏ சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்?  சான்று வழங்க முடிவெடுத்த பின்பும் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? என பல்வேறு கேள்விகளை அடுக்கினார். இதற்கு, படத்தில் பாதுகாப்பு படையின் சின்னத்தை சம்பந்தப்பட்ட நிபுணர்களின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் பல்வேறு பதில்களை தணிக்கை வாரியம் தரப்பில் அளிக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் திர்ப்பு இன்று(09.01.2026) அறிவிக்கப்படும் என அறிவித்திருந்தார்.  

அதன்படி இன்று காலை வழக்கை விசாரித்த நீதிபதி, படத்திற்கு யு/ஏ 16+ சான்று வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். இப்போது அந்த தீர்ப்பின் விவரம் வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது, “ஒரு படத்தை 5 பேர் கொண்ட தணிக்கை குழு உறுப்பினர்கள் பார்க்கிறார்கள். அப்படி பார்த்து அதில் பெரும்பான்மையான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தணிக்கை குழுவின் அதிகாரி சான்றிதழ் வழங்க முடிவு செய்கிறார். அதன் பிறகு, ஒரே ஒரு உறுப்பினர் மட்டும் ஆட்சேபனை தெரிவிக்கும் போது, அதை புகாராக கருத்தில் கொண்டு, மீண்டும் மறு ஆய்வுக்கு அனுப்புவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு படத்துக்கு தணிக்கை தர எப்போது முடிவு எடுக்கப்பட்டுவிட்டதோ, அதோடு வாரியத்தின் தலைவருக்கான அதிகாரம் முடிந்துவிட்டது. அதன் பிறகு ஒரு புகாரை வைத்துக்கொண்டு மறு ஆய்வுக்கு அனுப்பக்கூடிய அதிகாரம் அவருக்கு இல்லை. அதனால் ஏற்கனவே பெரும்பான்மையாக எடுக்கப்பட்ட முடிவை அடிப்படையாகக் கொண்டு படத்துக்கு சென்சார் சான்றிதழ் உடனடியாக வழங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே தணிக்கை வாரியம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

actor vijay chennai high court Jana Nayagan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe