அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய், சினிமாவுக்கு முழுக்கு போடவுள்ள நிலையில் அவரது நடிப்பில் கடைசிப் படமாக உருவாகியுள்ளது ‘ஜன நாயகன்’. வினோத் இயக்கியுள்ள இப்படத்தை கே.வி.என். புரொடக்ஷன் தயாரித்துள்ளது. இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் தணிக்கை சான்றிதழ் இன்னும் கிடைக்காததால் அறிவித்தபடி ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர்நீதி மன்றத்தில் நேற்று காலை அவசர வழக்கு தாக்கல் செய்தது. அதில், “கடந்த மாதம் 18ஆம் தேதி தணிக்கை குழுவினருக்கு படம் காண்பித்த போது சில காட்சிகளை நீக்க சொல்லியிருந்தனர். மேலும் சில வசனங்களை மியூட் செய்ய அறிவுறுத்தியிருந்தனர். அந்த காட்சிகளை நீக்கி மீண்டும் அவர்களுக்கு காண்பித்திருந்தோம். அதை பார்த்த அவர்கள் முதலில் யு/ஏ சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் திடீரென மறுஆய்வு குழுவிற்கு அனுப்பியிருந்தார்கள். அதனால் படத்திற்கான சான்றிதழை உடனடியாக வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும்” என கேட்டுக்கொண்டிருந்தனர்.
இந்த வழக்கு நேற்று பிற்பகல் நீதிபதி ஆஷா முன்பு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘படத்தில் மத உணர்வுகள் தூண்டும் வகையில் ஒரு காட்சி இருப்பதாக தணிக்கை குழுவுக்கு புகார் வந்திருக்கிறது. அதன் காரணமாகவே சான்றிதழ் வழங்குவது தொடர்பாக மறு தணிக்கை குழுவிற்கு அனுப்பியிருக்கிறோம். குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என எந்த நிர்பந்தமும் தணிக்கை குழுவிற்கு கிடையாது’ என வாதிட்டார். பின்பு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘யாரோ ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சான்றிதழ் அளிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என்ற சட்டப்பிரிவு தணிக்கை வாரிய சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் சான்றிதழ் வழங்கப்படவில்லை’ என்று கூறினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி யார் புகார் கொடுத்தார் என்பதை தாக்கல் செய்ய தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை இன்று ஒத்தி வைத்தார்.
அதன்படி இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் சார்பில் யார் புகார் கொடுத்தார் என்ற விவரம் தாக்கல் செய்யப்பட்டது. அதை பார்த்த நீதிபதி, புகாரில் எனது ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல என்று கருத்து தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட காட்சிகளை படக்குழு நீக்கிய பிறகும் எதனால் இந்த புகார் வந்திருக்கிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தணிக்கை வாரியம்,‘படம் பார்த்த பிறகு தணிக்கை குழு உறுப்பினர்கள் விவாதித்தனர். அதில் ஒரு உறுப்பினர் புகார் அளித்ததற்கு பின்னரே மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது’ என்றார். பின்பு நீதிபதி, ‘புகார் அளித்தவரே பேனலில் இருந்த ஒருவர் தான், யு/ஏ சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்? என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ‘நீதிமன்றம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அனுமதித்தால் அத்தனை கேள்விகளுக்கும் முழுமையாக பதில் அளிக்கப்படும்’ எனத் தணிக்கை வாரியம், தெரிவித்தது.
பின்பு படத்திற்கு யு/ஏ சான்று வழங்க முடிவெடுத்த பின்பும் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தணிக்கை வாரியம், ‘பாதுகாப்பு படைகளின் சின்னம் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது, இதற்கு சம்பந்தப்பட்ட நிபுனர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்’ என்றார். இது குறித்து படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டதா என நீதிபதி கேள்வி எழுப்ப, ‘மறு ஆய்வு குறித்து ஏற்கனவே தயாரிப்பு நிறுவனத்துக்கு தகவல் அனுப்பியிருந்தோம், அதே போல் 14 காட்சிகளை நீக்க ஏற்கனவே பரிந்துரை செய்தோம்’ என்றார். இதையடுத்து பேசிய நீதிபதி இந்த வழக்கு அனைத்து வழக்கிற்கும் மாறாக இருக்கிறது என்றார்.
இதனிடையே தயாரிப்பு நிறுவனம் தரப்பில், ‘பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வு செய்ய முடியும். ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது என கூற முடியும். படத்தை முதலில் பார்த்த குழுவினர் ஒருமனதாக சான்று வழங்க முடிவு செய்தனர். அதன் பின்னர் தனிப்பட்ட புகார் அளிக்க முடியாது’ என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தணிக்கை வாரியம் தரப்பு, “இந்த விவகாரத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை. எங்கள் அதிகாரத்தை கட்டுப்படுத்த முடியாது. முதல் தணிக்கைக் குழுவில் இருந்த ஐந்து பேர் மீண்டும் மறு ஆய்வு குழுவில் இருக்க மாட்டார்கள். வேறு 5 பேர் இருப்பார்கள். தணிக்கைக் குழு உறுப்பினர் படம் பார்த்தபின் புகார் அளித்ததால் மறு தணிக்கைக்கு அனுப்பினோம். திருப்தி இல்லையென்றால் மறுஆய்வுக்கு அனுப்புவது வழக்கமானதுதான். ஒரு திரைப்படத்தை பார்த்த பின்பும் மறு ஆய்வுக்கு உத்தரவிட தணிக்கை குழு தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. மறு ஆய்வுக்குழுவிற்கு அனுப்பியிருக்கிறோம். விரைவில் மறு ஆய்வு செய்யப்படும்’ என்றார்.
அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் திர்ப்பு நாளை மறுநாள்(ஜன.9) காலை வழங்கப்படும் என தெரிவித்தார். அன்றைய தினம் தான் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் படம் திட்டமிட்டப்படி வெளியாகுமா என்ற சந்தேகம் தற்போது தீவிரமடைந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/07/479-2026-01-07-17-25-19.jpg)