விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (09.01.2026) வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் கடந்த 6ஆம் தேதி காலை அவசர வழக்கு தொடுத்தது. பின்பு அன்றைய தினம் பிற்பகலிலே நீதிபதி ஆஷா தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் மத உணர்வுகள் தூண்டும் வகையில் ஒரு காட்சி இருப்பதாக தணிக்கை குழுவுக்கு புகார் வந்திருப்பதாகவும் அதன் காரணமாகவே மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்பு படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘யாரோ ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சான்றிதழ் அளிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் என்ற சட்டப்பிரிவு, தணிக்கை வாரிய சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, யார் புகார் கொடுத்தார் என்பதை தாக்கல் செய்ய தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டு அடுத்த நாளான 7ஆம் தேதி விசாரணையை ஒத்தி வைத்தார். அதன்படி, அடுத்த நாள் விசாரணையில் தணிக்கை வாரியம் சார்பில் யார் புகார் கொடுத்தார் என்ற விவரம் தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி, யு/ஏ சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்? சான்று வழங்க முடிவெடுத்த பின்பும் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? என பல்வேறு கேள்விகளை அடுக்கினார். இதற்கு, படத்தில் பாதுகாப்பு படையின் சின்னத்தை சம்பந்தப்பட்ட நிபுணர்களின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் பல்வேறு பதில்களை தணிக்கை வாரியம் தரப்பில் அளிக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் திர்ப்பு இன்று(09.01.2026) அறிவிக்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை வழக்கை விசாரித்த நீதிபதி, படத்திற்கு யு/ஏ 16+ சான்று வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ‘இன்றைய தினமே மேல் முறையீடு செய்ய என்ன அவசரம்’ என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, தணிக்கை வாரியம் தரப்பில், ‘எங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நியாயமான அவகாசம் வழங்கிய பின்பு உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, ‘தணிக்கை வாரியத்துக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் 24 மணி நேரத்தில் தனி நீதிபதி எதற்காக உத்தரவு பிறப்பித்தார்’ எனக் கேள்வி எழுப்பினார். பின்பு படத் தயாரிப்பு நிறுவனத்தை நோக்கி சென்சார் சான்றிதழ் பெறும் முன்னரே எதற்காக ரிலீஸ் தேதியை அறிவித்தீர்கள் என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து தனிநீதிபதி பிறப்பித்த யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கின் விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/09/460-2026-01-09-17-27-09.jpg)