கோவை விமான நிலையம் அருகே, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் (02.11.2025) இரவு ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் குறித்து 7 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்த போலீசார், துடியலூரில் உள்ள காட்டுப் பகுதியில் தலைமறைவாக இருந்த 3 பேரை சுட்டுப் பிடித்துள்ளனர். அவர்கள் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Advertisment

இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தற்போது இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “கோவை விமானநிலையத்தின் பின்புறம் இந்தக் கொடுமை நிகழ்ந்ததாக அந்த இடத்தைத் தொலைக்காட்சியில் காண்பித்தபோது அந்தப் பெண் மீதும், அவளது ஆண் நண்பன் மீதும் கோபம் வந்தது. பகலிலேயே ஆள்நடமாட்டமற்ற திகிலான அந்த இடத்திற்கு இரவு நேரத்தில் அவர்கள் போனது தவறு.

Advertisment

2. முதலில், அந்தப் பெண் தவறு. இவ்வளவு தனிமையான இடத்திற்கு எப்படிப் போகலாம்? பகலில் ஊருக்கு நடுவில் தெருவில் நடந்துபோகும்போதே கைபேசியைப் பிடுங்கிகொண்டு ஓடுவதும், கழுத்துச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுவதும் சாதாரணமாகிவிட்ட காலத்தில் இந்த இடத்துக்கு, இரவில், எப்படி ஒருவனுடன் செல்லலாம்? 

3. இரண்டாவது, அந்தப் பையன் தவறு. அவ்வளவு தனிமையான இடத்துக்கு இரவில் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு போனால், அவளைக் காப்பாற்றக்கூடிய திராணி இருக்கவேண்டும். நிச்சயமாக அந்த இடத்தை இவன்தான் அவளுக்கு அறிமுகப்படுத்தி இருக்கமுடியும். இப்போது அவள் இழந்ததை அவன் மீட்டுத்தர முடியுமா?

Advertisment

4. அந்த மூன்று முட்டாள்களுக்கும் ஆளுக்கு மூன்று நிமிடங்கள் ஒரு அரைகுறை இன்பம் கிடைத்திருக்கும். ஆனால் அவர்களது வாழ்க்கையே முடிந்துபோனதல்லவா இப்போது! இனி அழுது பயனில்லை. 

5. ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொள்வார்கள். மனம்நொந்து அழுவார்கள். பெற்றோரையும் மற்றோரையும் நேருக்குநேர் பார்க்கமுடியாமல் குனியும் அவர்கள் தலை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிமிராது.

6. இதைப்போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர் யாரும் சிக்காமல் தப்பிக்கவேமுடியாது. மாட்டித்தான் ஆவார்கள். 

7. இதை வாசிக்கிறவரில் இதைப்போன்ற வக்கிர சிந்தனையுள்ளவனும் இருப்பாய். எதிர்காலத்தில் இதைப்போல எதையாவது செய்துவிட்டு வருத்தப்படாதே. பெண்ணின் நலனைக்குறித்து கூட நீ சிந்திக்கவேண்டாம். உன் நலனுக்காக இதைப்போன்ற செயல்களில் ஈடுபடாதே. நீ சிறையில் தனிமையில் வருந்தி வருந்தி அழுதாலும், உன் வாழ்க்கை உனக்குத் திரும்பக் கிடைக்காது.

8. தவறான நண்பனைத் தவிர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.