உலகளவில் பிரபலமான அவதார் படத்தின் மூன்றாம் பாகம் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ என்ற தலைப்பில் உருவாகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள இப்படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், ஊனா சாப்ளின், கிளிஃப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், டிரினிட்டி பிளிஸ், ஜாக் சாம்பியன், பெய்லி பாஸ் மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோரும் நடித்துள்ளனர். லைட்ஸ்டார்ம் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தை சைமன் ஃபிராங்லென் இசையமைத்துள்ளார்.
இந்த பாகத்தில் பண்டோரா உலகின் கலாச்சார மற்றும் உணர்ச்சி நிலப்பரப்பை விரிவுபடுத்தும் ஃபயர் குலத்தின் தலைவரான வராங்கை படக்குழு அறிமுகப்படுத்துகிறது. இப்படம் வரும் 19 ஆம் தேதி ஆறு இந்திய மொழிகளில் வெளியாகிறது. அதனால் தற்போது ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இயக்குநர் ராஜமௌலியுடன் ஜேம்ஸ் கேமரூன் உரையாடிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இணையம் வாயிலாக பேசிய ஜேம்ஸ் கேமரூன் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது ஜேம்ஸ் கேமரூன் ராஜமௌலியை பார்த்து, “நான் உங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வர ஆசைப்படுகிறேன். அங்கு நீங்கள் செய்யும் மேஜிக்கை பார்க்க வேண்டும்” என்றார். அதற்கு ராஜமௌலி “அது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் சார். எங்கள் படக்குழுவிற்கு மட்டுமல்ல மொத்த திரையுலகமிற்குமே மகிழ்ச்சி தான். உங்களை அன்புடன் வரவேற்கிறோம்” என்றார். பின்பு பேசிய ஜேம்ஸ் கேமரூன், “அதை நான் விரும்பி செய்கிறேன். நீங்கள் தற்போது புதிதாக வாரணாசி என்ற படத்தை இயக்கி வருகிறீர்கள் அல்லவா” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ராஜமௌலி, “ஆமாம் சார். கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும் ஏழு எட்டு மாதங்கள் படபிடிப்பு இருக்கிறது” என்றார்.
பின்பு பேசிய ஜேம்ஸ் கேமரூன், “புலியை வைத்து எதாவது ஜாலியாக படம் எடுத்தால் சொல்லுங்கள்” என சிரித்தார். மேலும் ராஜமௌலியின் படப்பிடிப்பு தளத்தில் ஒரு கேமாரவை எடுத்துக்கொண்டு செகண்ட் யுனிட் டைரக்டர் போல சில ஷாட்டுகளை எடுப்பேன் என்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow Us