தமிழ் திரையில் உச்சநட்சத்திரமான விஜயின் கடைசிப் படம் ஜனநாயகன். இந்த படம் இன்று ( 09-01-26) வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருந்தது. எச் வினோத் இயக்கித்தில் உருவாகியுள்ள இந்த, படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்றது. இதில் ஏராளமான ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. பாடல்களின் சில வரிகளில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் ரசிகர்களையும் தாண்டி அரசியல் வட்டாரத்திலும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், பல மாவட்டங்களில் படத்திற்கான டிக்கெட் முன் பதிவுகளும் செய்யப்பட்டிருந்தன.
விஜயின் கடைசிப்படம் மற்றும் பாடல்களில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் என பல்வேறு காரணங்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக படக்குழு இப்படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தராவிடக்கோரி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவின் மீதான விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் ஜனநாயகன் படத்திற்கு யு / ஏ சான்று வழங்குமாறு நீதிமன்றம் தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இதனால் படத்திற்கு எப்போது தணிக்கை சான்று கிடைக்கும், படம் எப்போது வெளியாகும் என்ற தகவல் உறுதிப்படுத்தப்படாமல் இருக்கிறது. இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் படத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர். அந்த வகையில், நடிகர் ஜெய், "ஜனநாயகன்" படத்திற்கு ஆதரவாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "எப்போதும் உங்களை தடுக்க வழியில் தடைக்கற்கள் நிரம்பிக்கிடக்கின்றன, அதை உடைத்தெறிந்து வருவது உங்களுக்கு ஒன்றும் புதிதல்ல.. எல்லாரையும் போல ஒரு ரசிகனாக, தம்பியாக `ஜனநாயகன்' வரும் நாளே `பொங்கல்' என காத்திருக்கிறேன் அண்ணா.." என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Follow Us