ஈரானிய திரைத்துறையில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ஜாஃபர் ஃபனாஹி. அந்நாட்டில் பெண்களுக்கும் இருக்கும் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை தனது படங்களில் பேசி வந்தார். இவரது படங்கள் விமர்சன ரீதியாக சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. மேலும் பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளது. இவர் இயக்கிய ‘தி சர்க்கிள், ‘கமிஷன் கோல்ட்’, ‘ஆஃப் சைட்’ உள்ளிட்ட படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. ஆனால் ஈரானில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் மற்றும் அரசை விமர்சித்தும் எடுத்ததற்காக தடை செய்யப்பட்டது. இது போல் தொடர்ச்சியாக இவர் அரசாங்கத்தை எதிர்த்து செயல்பட்டு வருவதாக பலௌறை சிக்கலில் சிக்கியுள்ளார்.
இவருக்கு 2010 ஆம் ஆண்டு அரசை எதிர்க்கும் போராட்டங்களை ஆதரித்தாக 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 20 வருடங்களுக்கு படமே எடுக்கக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டது. பின்பு இரண்டு மாதம் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த அவர், வீட்டுக் காவலிலும் சில ஆண்டுகள் அடைக்கப்பட்டார். அப்போதும் தடையை மீறி மறைமுகமாக படம் எடுத்து சர்வதேச திரைப்பட விழாக்களில் அனுப்பி வந்தார். பின்பு வெளியே வந்தும் அதை தொடர்கிறார். அந்த வகையில் அவர் ஈரானில் அனுமதியின்றி புதிதாக எடுத்துள்ள ‘இட் வாஸ் ஜஸ்ட் அன் ஆக்​ஸிடன்ட்’ திரைப்படம் இந்தாண்டு நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அவ்விழாவின் உயரிய விருதுகளில் ஒன்றான தங்கப்பணை விருதைப் பெற்றது.
இந்த நிலையில் ஜாஃபர் பனாஹிக்கு ஒரு வருட சிறை தண்டனையும் இரண்டு வருட பயண தண்டனையும் விதித்து தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் கூறுகையில், “அரசாங்கத்தை எதிர்த்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் இத்தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளோம்” என்றார்.
Follow Us