இந்த ஆண்டுக்கான (2026) பொங்கல் வெளியீடாக விஜய்யின் 'ஜனநாயகன்' படம் வெளியாகும் என நீண்ட நாட்களாகக் கூறப்பட்டு வந்தது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தனர். இந்நிலையில், தணிக்கைச் சான்று கிடைக்காத காரணத்தினால் ஜனநாயகன், குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதே சமயம், பொங்கல் திருநாளை முன்னிட்டு விஜய்யின் 'தெறி' திரைப்படம் மறுவெளியீடு செய்யப்படுவதாக, அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் அறிவித்திருந்தார். 

Advertisment

அட்லீ இயக்கத்தில் உருவான படம் தெறி. இப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், சமந்தா, எமிஜாக்ஸன், மகேந்திரன், ராஜேந்திரன், ராதிகா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதோடு, நடிகை மீனாவின் மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. 

Advertisment

இந்த நிலையில், வருகிற பொங்கலுக்குத் தெறி படத்தை மறுவெளியீடு (ரீ-ரிலீஸ்) செய்யப்போவதாகப் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்க முடிவெடுத்துள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். இது குறித்து, “பொங்கல் விழாவை முன்னிட்டு வெளியாகும் புதிய படங்களின் தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தெறி படத்தின் மறுவெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது” என எக்ஸ் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.